
அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்ததை அடுத்து முதல்முறையாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்ததுள்ளது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக முக்கிய நிர்வாகிகள் வருகை தந்த நிலையில், தற்போது முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர், ஓ.பி.எஸ் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இருவரின் வருகையின் பொழுதும் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஒருபுறம் 'இ.பி.எஸ் தான் நிரந்தர முதல்வர்' என முழக்கம் எழுப்ப, மறுபுறம் ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்கள் 'அம்மாவின் முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ்' என முழக்கமிட்டனர்.
இந்தக் கூட்டத்தில் இப்போதே முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறினார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதெல்லாம் தேவையில்லை அ.தி.மு.க.வில் எப்போதும் அப்படி நடந்ததில்லை என்றார். அதற்கு, அப்படி என்றால் நீங்கள் என்ன அம்மாவா எனக் குரல் வந்தது. அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா இறந்த பிறகு, கடந்த மூன்று வருடமாக ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவன் நான், எனக்குத் தெரியும். இப்போது இந்தப் பிரச்சனையை எடுத்தால் அது தி.மு.க.விற்கு சாதகமாகப் போய்விடும் என்றார். ஆனால் அதற்கு அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்களோ இந்தப் பிரச்சனையைக் கிளப்புவதே தி.மு.க.தான். யார் முதல்வர் வேட்பாளர் என்றுதான் பிரச்சனை எழுந்துள்ளது. ஓரிரு மாதங்களில் சசிகலா விடுதலையாக உள்ளார். அப்பொழுது நிலைமை என்னவாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆகவே எம்.ஜி.ஆருக்கு பிறகு, அம்மாவிற்குப் பிறகு, அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவரை முதல்வர் வேட்பாளர் எனத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறினார்கள். அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதற்கெல்லாம் காலம் கடந்து விட்டது. இப்பொழுது தமிழக மக்கள் மத்தியில் அதைக் கூற முடியாது எனக் கூறினார்.
தொடர்ந்து இரு தரப்பிலும் பேசும்பொழுது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், கமிட்டி போடுவதாக நீங்கள் கூறினீர்களே... கமிட்டி என்ன ஆனது. இப்போது உள்ள குழுவில் சேர்ந்து 15 பேர் கொண்ட கமிட்டியை அமைக்க வேண்டும் அல்லவா. அந்த 15 பேர் கொண்ட கமிட்டி அமைப்பது எப்போது எனக் கேட்கப்பட்டபோது. அதற்கு உடனடியாக பதில் கூறிய எடப்பாடி பழனிசாமி, கமிட்டியெல்லாம் இப்பொழுது போட முடியாது. கமிட்டி போட்டு அந்த கமிட்டி பேசுவதை எல்லாம் நான் கேட்க முடியாது எனக் கூறினார்.

அதற்கு அப்படியெல்லாம் கூறக்கூடாது என ஓ.பி.எஸ் தரப்பு கூறியது. ஒரு கட்டத்தில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய இருவரும் காரசாரமாக மோதிக்கொண்ட பிறகு, கமிட்டி இப்போது இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறினார். அதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், கமிட்டி இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை எனக் கூறினார். இது தொடர்பாக அ.தி.மு.க செயற்குழுவைக் கூட்டி முடிவெடுத்துக் கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி கூற, அதுவும் நல்லதுதான். எங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என பன்னீர்செல்வம் தரப்பு கூறியது. இந்தநிலையில் கமிட்டி போடப்படுமா அல்லது போடப்படாத என்பதுதான் அ.தி.மு.க.வில் மிகப் பெரிய விவாதமாக தொடங்கியிருக்கிறது.