
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தாயார் காலையில் உயிரிழந்த நிலையில் அந்த சோகத்தை மறைத்துக் கொண்டு, மாணவர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற சம்பவம் தொடர்பான செய்திகள் அண்மையில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இதய நோயால் உயிரிழந்த தாய் சுபலட்சுமியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு காலில் விழுந்து ஆசி பெற்று மாணவன் சுனில்குமார், தேர்வு எழுத சென்ற காட்சிகள் பார்ப்போர் மனதை கலங்கடித்தது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதேபோல் தந்தை உயிரிழந்த நிலையில் மாணவி ஒருவர் தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு தேர்வு எழுதச் சென்ற சம்பவம் மீண்டும் ஒரு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த சம்பமும் திருநெல்வேலி மாவட்டத்திலேயே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.