Skip to main content

திடீரென பின்வாங்கிய எடப்பாடி பழனிசாமி- நீதிமன்றத்தில் பரபரப்பு

Published on 11/03/2025 | Edited on 11/03/2025
 Edappadi Palaniswami suddenly withdrew the petition

கடந்த 2024 மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் போட்டியிட்ட நிலையில், அந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக தேமுதிக போட்டியிட்டது.

தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, 'தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை' என குற்றம் சாட்டியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பிரச்சார பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில் 'உண்மைக்கு மாறாகவும், தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தேர்தல் பிரச்சாரத்தில் தவறான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார்' என குறிப்பிட்டு இருந்தார். சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் இருக்கிறது.

 Edappadi Palaniswami suddenly withdrew the petition

ஏற்கனவே கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விடுவிக்க வேண்டும்' என மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை ஏற்கக்கூடாது என தயாநிதி மாறனின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கிலிருந்து எடப்பாடி பழனிசாமி விடுவிக்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

சார்ந்த செய்திகள்