அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகளை முன்னிருத்தி திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அமைச்சருக்கு எதிராக பேசியதாக அரிமழம் ஒ செ ராமலிங்கம், கலை இலக்கிய அணி தென்னலூர் பழனியப்பன் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் ராமலிங்கம் கைது செய்யப்பட்டார். தென்னலூர் பழனியப்பனை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து விராலிமலை, இலுப்பூரில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.
இந்த நிலையில் திமுகவினரின் பெட்ரோல் பங்க், கடைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அதிமுகவினரின் அராஜக போக்கை கண்டித்தும் 24 ந் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திமுக சார்பில் காவல் துறை அனுமதி கேட்டுள்ள நிலையில்.. அதே நாளில் அதே நேரத்தில் திருமயம் சமஉ, மா செ பொறுப்பு ரகுபதியின் ஜெ. ஜெ. கல்லூரி வாசல், ரகுபதி வீடு, திமுக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வேண்டும் என்று அதிமுக ந.செ. பாஸ்கர் மாவட்ட எஸ் பி செல்வராஜ் வீட்டிற்கு ஆதரவாளர்களுடன் சென்று மனுகொடுத்துள்ளார்.
இரு தரப்பும் அனுமதி கேட்டுள்ள நிலையில் அனுமதி கொடுத்தால் மோதல்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று இருவருக்குமே அனுமதி மறுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றால் திமுக வினர் கைது செய்யப்படலாம் என்றும் கூறுகின்றனர்.
மேலும் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என்பதற்காகவே அதிமுகவும் அனுமதி கேட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். புதுக்கோட்டையில் அதிமுக - திமுக மோதல்கள் உச்சத்தில் உள்ளது.