திருத்தணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பதி செல்லும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காகத் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதிகளில் பல்வேறு இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ஆட்டோவில் பாதுகாப்பற்ற முறையில் பேனர்களை கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்பொழுது ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட பேனர் ஒன்று காற்றில் பறந்து, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்கள் மீது விழுந்தது. இருசக்கர வாகனத்தை ரேஷ்மா என்பவர் ஓட்டிச் சென்ற நிலையில், கீர்த்தனா என்பவர் பின்புறமாக அமர்ந்து சென்று கொண்டிருந்தார். இதில் பேனர் விழுந்து கீர்த்தனா படுகாயமடைந்த நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 'இப்படியா பாதுகாப்பற்ற முறையில் பேனரை எடுத்துட்டு போவீங்க' என அந்தப் பகுதி மக்கள் ஆவேசப்படும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று ஒரத்தநாடு புலவன்காடு பகுதியில் அதிமுக பேனர் விழுந்து பைக்கில் சென்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில், இன்று திருத்தணியில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.