Skip to main content

பைக் மூலம் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்து பயிர்களுக்கு பாய்ச்சும் அவலநிலை...

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
bike



 

கஜா புயலுக்கு பிறகு ஒரு மாதமாக ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின்சாரம் கிடைக்காமல் நெல் போன்ற பயிர்கள் கருகி வருகிறது. இந்த பயிர்களை காக்க குளங்களில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் சைக்கிளில் தண்ணீர் இறைக்கும் மோட்டாரை பொருத்தி தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள் விவசாயிகள்.

கருகும் பயிர்கள்:


கஜா புயல் தாக்கத்தால் மரங்களும், மின்கம்பங்களும் ஒடிந்து சாய்ந்ததால் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, குடிதண்ணீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் தீவிரமாக களமிறங்கிய மின்வாரிய பணியாளர்கள் மற்றும் வெளியூர் பணியாளர்கள் இணைந்து முதல்கட்டமாக குடிதண்ணீர்க்காக நீர்தேக்க தொட்டிகளுக்கு மின் இணைப்புகளை வழங்கி வந்தனர். அதன் பிறகு வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் பணியில் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தான் 15 நாட்கள் வரை பணியில் இருந்த வெளியூர் மின் பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். தொடக்கத்தில் அதிகமாக வந்த மின்கம்பங்கள் பின் படிப்படியாக குறைக்கப்பட்டது.


அதன் பிறகு மின் பணிகள் முற்றிலும் முடங்கியது. உள்ளூர் மின்பணியாளர்களை வைத்துக்கொண்டு மின்கம்பங்கள் பற்றாக்குறையுடன் ஒவ்வொரு கிராமத்திற்கும் மின் இணைப்புகள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் 25 சதவீதம் வீடுகள் வரை மின் இணைப்புகள் வழங்காமல் உள்ளது.  அதனால் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், அந்தந்த கிராம விவசாயிகள் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுங்கள் என்று மின்வாரிய அலுவலகங்களுக்கு சென்று முற்றுகையிட்டும் சாலை மறியல் செய்தும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். 


இந்த நிலையில் தென்னை, தேக்கு, மரங்கள் சாய்ந்து கிடப்பதை அகற்ற முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு, மற்றொரு பிரச்சனையாக நெல், சோளம், போன்ற பயிர்களும் தண்ணீர் இன்றி கருகத் தொடங்கிவிட்டது. மின்சாரம் இல்லாமல் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர். 


மோட்டார் சைக்கிள் மூலம் தண்ணீர்:


இதே போல கீரமங்கலம், நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம், குளமங்கலம், மாங்காடு, வடகாடு, நெடுவாசல், புள்ளாண்விடுதி உள்ளிட்ட பல கிராமங்களில் நெல் பயிர்கள் கருகத் தொடங்கிவிட்டது. 


இந்த நிலையில் மாங்காடு கிராமத்தில் சில விவசாயிகள் கதிர் வரும் நேரத்தில் கருகும் பயிர்களை காக்க குளங்களில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார்கள் மூலம் பாய்ச்ச முயன்றுள்ளனர். அதற்காக மோட்டார் சைக்கிளில் தண்ணீர் இறைக்கும் மோட்டாரை இணைத்து மோட்டார் சைக்கிள் மூலம் எஞ்சினை இயக்கி தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். 


இது குறித்து விவசாயிகள் கூறும் போது... விவசாய ஆழ்குழாய் கிணறுகளுக்கு இதுவரை மின்சாரம் கிடைக்கவில்லை. அதனால் பயிர்கள் கருகி வருகிறது. தற்காலிகமாக மின்சாரம் கிடைக்கும் வரை பயிர்களை காப்பாற்ற குளத்து தண்ணீரை மோட்டார் சைக்கிளில், தண்ணீர் இறைக்கும் மோட்டாரை இணைத்து  பாய்ச்சி வருகிறோம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் செலவாகிறது. 5 மணி நேரத்தில் ஒரு ஏக்கர் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடிகிறது. இதனால் கூடுதல் செலவுதான் ஆகிறது. மேலும் குளம் இல்லாத பகுதியில் உள்ள விவசாயிகள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஜெனரேட்டர், டிராக்டர் மூலமும் தண்ணீர் இறைக்கிறார்கள். பல இடங்களில் செலவு செய்ய முடியாத விவசாயிகள், கண்முன்னே பயிர்கள் கருகுவதை கண்டு காப்பாற்ற முடியாமல் கண்ணீர் வடிக்கின்றனர் என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்