
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இதனைச் சுட்டிக்காட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் எனப் பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார்.‘தமிழ்நாட்டு மக்களை பிளாக்மெயில் (Blackmail) செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால் தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்’ எனக் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் தமிழ்நாட்டு உரிமைகளில் அக்கறையும் கொண்ட அனைவரும் ஒன்றிய பாஜக அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகிறார்கள். வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகத் திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்?.
சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்குக் குரல் கொடுக்க வேண்டாமா?. இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குகுழி பழனிசாமிக்கு?. இரு மொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதைக் கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் எனக் கூறிக்கொண்டு ஒன்றிய பாஜக அரசைக் கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பழனிசாமி தயவு செய்து அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும். எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட்டுள்ள பதிவில், “மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, கடந்த 28.08.2024 அன்றே எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுவிட்டார். அன்றைய தினம் புழல் சிறையில் இருந்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். (சிறையில் செய்தித்தாள்கள் படிக்கவில்லை போலும்!). தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே, "அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கையே தொடரும் என ஆகஸ்ட் 2020ல் அறிவித்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்வி கொள்கையே ஆனாலும், அதனை அதிமுக கடுமையாக எதிர்க்கும். அதற்கான மிக வலுவான குரல் எடப்பாடி பழனிசாமியின் குரலாகத் தான் இருக்கும். இருமொழிக் கொள்கையை எப்போதும் வலுவாக நிலைநிறுத்திய அதிமுக தான் ஒரிஜினல் திராவிட இயக்கம். தங்கள் பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுத்து, மேடையில் மட்டும் நாடாகமாடுவது திமுக தான். தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. இவர்களின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் தான் என்பதை உணர வேண்டும். கல்விக்கொள்கை உட்பட எந்த ஒரு காரணத்தைக் காட்டியும், நம் மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி ஒருபோதும் தடைபடக் கூடாது. எனவே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.