தேர்தல் களம் பரபரப்பாகச் சுழன்று கொண்டிருக்கக் கூடிய இந்த நாட்களில் வேட்பாளர்கள் பல்வேறு புது யுக்திகளைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தி மக்களை கவரும் வகையில் திட்டங்களை அள்ளி வீசி பல்வேறு வழிகளில் தங்களை மக்களின் மனதில் பதிய வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட இந்த பரபரப்பான தேர்தல் களத்தில் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பத்மநாபனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட அ.தி.மு.க. தொண்டர்கள், வேட்பாளருடன் உறையூர் பகுதியில் உள்ள வெக்காளி அம்மன் கோவில் பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்களின் தெருக்களுக்கு வாக்குச் சேகரிக்க உள்ளே சென்றுள்ளனர்.
இதனை அறிந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என அனைவரும் பத்மநாபனை தங்களுடைய தெருக்களுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி நீங்கள் எங்களுடைய பகுதியில் வந்து வாக்குச் சேகரிக்கக் கூடாது என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் அறிந்து வந்த உறையூர் காவல்துறையினர் வேட்பாளரை தடுத்து நிறுத்திய அவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களை கலைக்க முயன்றும் அவர்கள் கலையாமல் வேட்பாளரை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.