ஜனவரியில் அரசியல் கட்சித் தொடங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "கடந்த 2017- ஆம் ஆண்டு டிசம்பர் 31-ல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன். கரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி; நான் தோற்றாலும் அது மக்களின் தோல்வி. அரசியல் மாற்றம் கட்டாயம்; காலத்தின் தேவை. ஆட்சி மாற்றம் நடக்கும்; அரசியல் மாற்றம் நடக்கும். இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல.
நான் ஒரு சின்ன கருவி தான்; மக்கள் நீங்கள் தான் எல்லாத்தையும் முடிவு செய்ய வேண்டும். கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் தவற மாட்டேன். ‘அண்ணாத்த’ படத்தை முடித்துக்கொடுப்பது எனது கடமை; அதை முடித்து விட்டு கட்சிப் பணியில் ஈடுபடுவேன். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் என்னை விட சந்தோஷப்படக்கூடிய ஆள் வேறு யாருமில்லை" இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிவித்துள்ளார்.
இதனிடையே, ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பை சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றன. மேலும் பல்வேறு பிரபலங்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.