சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கனி அங்காடியில் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட ஏழு டன் மாம்பழங்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் நேற்று பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மாம்பழங்கள் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இப்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதேபோல் வெளி மாநிலங்களிலிருந்தும் விற்பனைக்காக வரும் பழங்கள் கடைகளுக்கு வரும் பொழுது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக அடிக்கடி உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர் .அப்பொழுது ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட சுமார் ஏழு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மண்ணில் கொட்டி அழித்தனர். இப்படி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடுவதால் கண், வயிறு எரிச்சல் முதல் புற்றுநோய் வரையிலான உடல் உபாதைகள் ஏற்படும் என தெரிவித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ரசாயனத்தில் பழுக்கவைக்கப்பட்ட விற்பனை செய்த 20 கடை உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர். இனி இதுபோல் ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்கக் கூடாது என அங்கிருந்த விற்பனையாளர்களிடம் எச்சரிக்கை தெரிவித்து விட்டு சென்றனர்.