தர்மபுரியில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து 7 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் திடீரென்று மாயமான சம்பவம் அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பங்களா பின்பக்கத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் (டிஎன்சிஎஸ்சி) சொந்தமான திறந்தவெளி கிடங்கு செயல்பட்டு வருகிறது. டிஎன்சிஎஸ்சி மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், ரயில் மூலம் கொண்டு வரப்பட்டு, இந்த திறந்தவெளி கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் இங்கிருந்து தேவைக்கேற்ப நெல் அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அரிசியாக அரைத்து மீண்டும் டிஎன்சிஎஸ்சி கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அரிசி, ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தர்மபுரி டிஎன்சிஎஸ்சி கிடங்கில் இருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் திடீரென்று மாயமாகி விட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து டிஎன்சிஎஸ்சி ஊழல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தக் கிடங்கிற்கு நேரில் வந்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானது உறுதி ஆகியுள்ளது.
இது தொடர்பாக டிஎன்சிஎஸ்சி அதிகாரிகளிடம் பேசினோம். “கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தஞ்சை, நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தர்மபுரிக்கு ரயில் மூலம் 22 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வந்திறங்கின. அவற்றில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் குறைந்துள்ளதாக ஊழல் தடுப்புப்பிரிவு காவல்துறை கூறியதன் பேரில், நாங்களும் நேரடி விசாரணையில் இறங்கியுள்ளோம். இந்த மாவட்டத்தில் உள்ள 80 அரிசி ஆலைகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறோம். இந்த மாதத்தில் இருப்பு வைத்துள்ள நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அனுப்பினால்தான், உண்மையில் எத்தனை மூட்டை இருப்பு குறைவு என்பது தெரிய வரும். ஊழியர்கள் பற்றாக்குறையால் விசாரணை நடத்துவதில் சிரமம் உள்ளது. எங்கு தவறு நடந்திருக்கிறது என்பதை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார்கள் டிஎன்சிஎஸ்சி அதிகாரிகள்.