கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்காலனியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பக்கிரிசாமி (63). விருத்தாசலம் நகராட்சி 30 வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான இவர் விருத்தாசலம் சக்தி நகரில் வைத்திலிங்கா நர்சரி பிரைமரி பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் யூ.கே.ஜி படித்து வந்த புதுப்பேட்டையில் வசிக்க கூடிய தம்பதியரின் 5 வயதுடைய சிறுமியை கடந்த 10ஆம் தேதி பள்ளியின் தாளாளரும், தி.மு.க கவுன்சிலருமான பக்கிரிசாமி பாலியல் வன்கொடுமை செய்ததையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை எனவும், எஃப்.ஐ.ஆர்-ஐ மாற்றி பதிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட சிறுமியின் தாத்தா மற்றும் பாட்டி குற்றம் சாட்டுகின்றனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், உரிய பாதுகாப்பு இல்லை எனவும் கூறி உறவினர்கள் அரசியல் கட்சியினர் நேற்று முன்தினம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பள்ளி தாளாளர் பக்கிரிசாமிக்கு கடுமையாக தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மல்லிகா தலைமையில், மாவட்ட துணை செயலாளர் அன்புச்செல்வி, வட்டத் தலைவர் சந்தனமேரி, செயலாளர் ஜெயலட்சுமி, பொருளாளர் சுமதி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சத்யா, கவிதா மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சார் ஆட்சியர் லூர்தூசாமியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்த புகார் மனுவில், 'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையான சிகிச்சை அளித்திட வேண்டும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கிரிசாமி மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜாமீன் வழங்கக் கூடாது, பாதிக்கப்பட்ட குழந்தை புகாரில் தெரிவித்தும் பள்ளியில் பணியாற்றும் இரண்டு பெண் ஆசிரியர்கள் எஃப்.ஐ.ஆர்-ல் சேர்க்கப்படவில்லை. அந்த சந்தேகத்துக்குரிய பெண் ஆசிரியைகள் மீது உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிய வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சிறுமியின் குடும்பத்தாருக்கு பல்வேறு நபர்களால் அச்சுறுத்தலும், மன உளைச்சலும் ஏற்பட்டு வருவதால் அக்குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி சம்பந்தமாக உடல்நிலை குறித்து விருத்தாசலம் அரசு தலைமை மருத்துவர் விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் வைத்திலிங்கா பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், தவறான சம்பவங்கள் ஏதும் நடந்திராத வண்ணமும் முறையான ஆய்வு மேற்கொண்டு அப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், ஏற்கனவே விருத்தாச்சலத்தில் சில பள்ளிகளில் இதுபோல் சம்பவங்கள் நடந்துள்ளதால், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவி வருவதை எண்ணி, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இது போல் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, தமிழக அரசு கல்வித்துறை ஆய்வு நடத்தி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து மாதர் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.