நீலகிரி மாவட்டம் உதகைக்கு அருகே உள்ள சீகூர் வனப் பகுதியில், பிரசித்தி பெற்ற ஆனிக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை விசேஷ நாட்களில் மட்டுமே திறக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் ஐதீகம். அதற்கேற்ப, கார்த்திகை தீபத் திருநாளில் இந்த கோவில் திறக்கப்பட்டு பல்வேறு வகையான பூஜைகள் நடைபெற்றது. இதையறிந்த உதகை, கோத்தகிரி பகுதியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர். ஆனால், இந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்றால் வனப் பகுதியில் இருக்கும் ஆனிக்கல் ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும்.
இந்நிலையில், காலை நேரத்தில் ஆற்றுப்பகுதியில் குறைந்த அளவு தண்ணீர் ஓடிய நிலையில், பக்தர்கள் வெகுவாக கடந்து சென்றனர். அந்த சமயத்தில், மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆனிக்கல் ஆற்றுப் பகுதியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத பக்தர்கள் வெள்ளத்திலிருந்து தப்பிப்பதற்காக அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருந்தனர். அதிலும், சிலர் ஒவ்வொருவராக ஆற்றைக் கடக்க முயன்றபோது ஜெக்கலொரை கிராமத்தைச் சேர்ந்த சரோஜா, வாசுகி, விமலா, சுசீலா ஆகிய 4 பெண்கள் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சீகூர் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களைப் பத்திரமாக மீட்டனர். மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் இரவு சூழ்ந்து விட்டதால் மீட்புப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு நேற்று காலை மீண்டும் மீட்புப் பணிகளைத் தொடங்கிய நிலையில் விமலா, சரோஜா, வாசுகி ஆகியோரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுசீலா என்ற பெண்ணின் உடலைத் தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.