தமிழகத்தில் மிகப்பெரிய மொபைல் ஆப்ரேட்டர் சர்வீசராக இருந்தது ஏர்செல் நிறுவனம். கிராமங்களில் முதல் முதலாக டவர் அமைத்து செல்போன் இணைப்புகள் தந்ததால் இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உருவானார்கள். கோயம்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தமிழக ஏர்செல் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் சர்வீஸ் வழங்கிவந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது நிறுவனத்தின் அலைவரிசைகளை டவரோடு சேர்த்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டு அங்கு செயல்பட்ட தனது கிளைகளை மூடியது.
தமிழகத்தில் ஏர்செல் தனது சேவையை வழங்கும் என அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் சரியாக கிடைக்காமல் அதன் வாடிக்கையாளர்கள் தவித்து வந்தனர். தமிழக ஏர்செல் நிறுவனத்தையும் மூடப்போகிறார்கள் என்கிற தகவல் பரவியது. இதனால் பயந்த பல ஏர்செல் வாடிக்கையாளர்கள் போர்ட் மூலம் வேறு நிறுவனத்துக்கு மாற முடிவு செய்து ரெக்வெஸ்ட் தந்துவிட்டு காத்திருந்தனர். நிறுவனத்தை மூடவில்லை, அதுவெறும் வதந்தி என ஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பதிலாக குறுந்தகவல் அனுப்பியது.
ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்து மாறலாம் என காத்திருந்தனர். இந்நிலையில் இன்று 20.2.18ந்தேதி திருவண்ணாமலை, போளுர், ஆரணி, வந்தவாசி, செஞ்சி, திருக்கோவிலூர் என தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஏர்செல் டவர் முற்றிலும் முடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான ஏர்செல் வாடிக்கையாளர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.
தங்களது கைபேசி எண் பலரிடம் உள்ளதால் அதை வேண்டாம் என தூக்கி போட வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை. சர்விஸ் வழங்கும் தொலைபேசி நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளலாம் என நிறுவனத்துக்கு குறுந்தகவல் அனுப்பினால் அவர்கள் கோட் வழங்குவார்கள். அந்த கோட் எண்ணை கொண்டும்போய் வாடிக்கையாளர் மாற விரும்பும் நிறுவனத்தில் தந்தால் தான் அந்த நிறுவனத்தில் அதே எண் கிடைக்கும். அப்படி குறுந்தகவல் அனுப்ப ஏர்செல் சிக்னல் கிடைக்க வேண்டும், இப்போது அதுவும் கிடைக்காததால் திருவண்ணாமலை மாவட்ட ஏர்செல் வாடிக்கையாளர்கள் நொந்துப்போய் உள்ளார்கள்.
இதுப்பற்றி விளக்கம் பெற திருவண்ணாமலை ஏர்செல் அலுவலகத்துக்கு வாடிக்கையாளர்கள் சென்றால் அது நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர் ஏஜென்சி எடுத்தவர்கள். வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்பு கொண்டால் அங்கு யாரும் போனை எடுப்பதில்லை என்பதால் நொந்துப்போய்வுள்ளனர் வாடிக்கையாளர்கள்.