சேலம் அருகே, பைலட் வேலை வாங்கித் தருவதாக ஆசை வலை விரித்து பெண் பொறியாளரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரி. பி.இ., பட்டதாரி. இவருடைய செல்போன் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், விமான பைலட் வேலை காலியாக இருப்பதாகவும், விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறி, செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு வெங்கடேஸ்வரி தொடர்பு கொண்டு, பைலட் வேலையில் சேர்வதற்கு உரிய கல்வித்தகுதி இருப்பதாகவும், தனக்கு அந்த வேலையை வாங்கித் தரும்படியும் கேட்டுள்ளார். எதிர்முனையில் பேசிய மர்ம நபர், பைலட் வேலை வேண்டும் என்றால் 15 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதை நம்பிய வெங்கடேஸ்வரி, மர்ம நபர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கு எண்ணிற்கு 15 லட்சம் ரூபாயை செலுத்தி உள்ளார். ஆனால், பல மாதங்கள் ஆகியும் அவருக்கு பைலட் வேலை வாங்கித் தரவில்லை. அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டபோது பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வெங்கடேஸ்வரி, இதுகுறித்து சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.