ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் 1.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பணப்பட்டுவாடா புகாரின் அடிப்படையில் அமமுக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது அமமுகவினர் - அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவலர்களை அலுவலகத்திற்குள் நுழைய அமமுகவினர் தடுத்தனர். போலீசாரை தாக்க முற்பட்டபோது, பாதுகாப்பு கருதி போலீசார் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கிசூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இந்நிலையில் அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் உட்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆயுதங்களை வைத்து அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி செய்தல், தகாத வார்த்தைகளால் திட்டி பணி செய்யவிடாமல் தடுத்தது உட்பட 7 பிரிவுகளில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் உட்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேனி ஆண்டிபட்டி அமமுக ஒன்றிய அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் ஒரு தபால் வாக்கு சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 9 மணிநேரம் சோதனை நடத்தியதில் ரூபாய் 1.48 கோடியும் 94 பண்டல்களில் வாக்காளர் பெயர் பட்டியல் எண்ணுடன் வைக்கப்பட்டிருந்ததாகவும், வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.