Skip to main content

புதுவை மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு! – மத்திய அரசும் புதுச்சேரி அரசும் விளக்கமளிக்க உத்தரவு!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

10 percent reservation for government school students in Puducherry medical colleges! - Central Government and Puducherry Government ordered to explain!

 

புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க, மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக,  புதுவை அமைச்சரவை முடிவு செய்து, துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது. துணைநிலை ஆளுநர், அமைச்சரவையின் முடிவை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார்.


இந்த நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு முடித்த மாணவி சுப்புலட்சுமியின் தாயார் மகாலட்சுமி, ‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதுச்சேரி அரசு முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.’ எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

 

அதில், ‘கடந்த 2016 - 17ஆம் ஆண்டிலிருந்து அரசுப் பள்ளியில் பயின்ற 16 முதல் 22 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. ஆனால்,  தனியார் பள்ளியில் பயின்ற மாணர்வர்கள் 243 பேர் முதல் 402 பேர் வரை  மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதுச்சேரி அரசு முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை,  புதுச்சேரியில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த தடைவிதிக்க  வேண்டும்.’ எனக் கோரிக்கை  வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக, புதுச்சேரி அமைச்சரவையின் முடிவு குறித்து சில விளக்கங்களைக் கேட்டு, புதுச்சேரி அரசின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளதாக, துணை நிலை ஆளுநர்  நேற்று வெளியிட்ட அறிக்கையை நீதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், மனு தொடர்பாக டிசம்பர் 21ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு, மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்