
திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த அம்பூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷீலா(60) மற்றும் அவரது மருமகள் சிந்து ஆகியோர் நேற்று இரவு ஆம்பூரில் நடைபெற்ற உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஷீலா மற்றும் சிந்து ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்த பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் ஷீலா கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலி பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.
அப்பொழுது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி ஷீலா கீழே விழுந்த போது அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் ஷீலாவை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழிப்பறி சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து 10 சவரன் தங்கசங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.