உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (09.12.2019) முதல் தொடங்குகிறது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரு கட்சிகள் எழுதி, இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்த பாத்திரத்தையும் ஏற்கப்போவதில்லை என்று கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே தேர்தலில் அரங்கேறும். இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கு பெறுவதால் கிடைக்கக்கூடிய முன்னேற்றம் சொற்பமானது. மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப்போவதில்லை. 2021- ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே நம் லட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம்". இவ்வாறு மக்கள் நீதி மய்யம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரஜினி மக்கள் மன்றம் சார்பில் "உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை" என்று அறிக்கை வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.