
தமிழகத்தில் அண்மைக் காலமாக பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது மதுரையில் கடைக்குச் சென்ற சிறுமிக்கு 6 சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அருகே உள்ள கடைக்குச் சென்றுள்ளார். ஆனால் கடைக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் சிறுமியை பற்றி தகவல் தெரியாததால் பெற்றோர் பதற்றமடைந்தனர். இதனையடுத்து நீண்ட நேரம் கழித்து தேடிக்கொண்டிருந்த பெற்றோர் முன்பு சிறுமி அழுதபடி வந்து நின்றுள்ளார்.
சிறுமியிடம், ‘என்ன ஆனது என்று பெற்றோர் கேட்க, அழுதபடி அப்பகுதியை சேர்ந்த சிலர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் 14 வயது சிறுமிக்கு அவருடன் பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் உள்பட 6 சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் 6 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குச் சென்ற சிறுமிக்கு 6 சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மதுரை மாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.