உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,341 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1,33,057 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 800 ஐ கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 19 பேர் உயிரிழந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 66லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதோடு முடிந்தளவு வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் உள்துறை அமைச்சரான அமித்ஷா இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசாம் மாநிலத்தில் கடைகளை மூடச் சொன்ன காவலர்கள் மீது கடைக்காரர்கள் கற்களால் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ட்விட்டரில் அமித்ஷா குறித்து "அமித்ஷா எங்கே"என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. மேலும் உள்துரை அமைச்சராக இருக்கும் அவர் இந்தியாவில் கொரோனாவின் நிலை என்ன? என்ன செய்ய வேண்டும் என ஏதேனும் மக்களுக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.