'Emergency law expires today-Anbumani Ramadoss

ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாவிற்கு விளக்கம் கேட்டு நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு தமிழக அரசு சார்பிலும் பதில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி இன்றுடன் காலாவதியாகிறது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பான டிவிட்டர் பதிவில், 'இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213(2)(ஏ)-இன்படி சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசரச் சட்டம் காலாவதியாகிவிடும். அக்டோபர் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூடி இன்றுடன் 6 வாரங்கள் நிறைவடைவதால் அவசர சட்டம் காலாவதியாகிறது.

Advertisment

ஆன்லைன் சூதாட்டத் தடை காலாவதியானால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும். தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை மிகவும் அவசியம். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் சட்டப்பேரவையில் இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆளுநரின் ஐயங்களுக்கும் அரசு தெளிவான பதில் அளித்திருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்றைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

அதேபோல் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், ''இந்த ஆன்லைன் விளையாட்டுகளால் 80 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இந்த ஓராண்டில் மட்டும் 32 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் ஈகோ பிரச்சனை இருந்தது என்றால், இந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் யாராவது ஒருவர் தற்கொலை செய்தார்கள் என்றால் அது ஆளுநருக்குதான் போய் சேரும். அரசு அவசர சட்டம் கொண்டு வந்தார்கள், சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆனாலும் ஏன் இன்னும் ஆளுநர்கையெழுத்திடவில்லை என்று எனக்கு புரியவில்லை. தமிழக ஆளுநர் இது தொடர்பாக கேள்வி எழுப்பியத்திற்கும் தமிழக அரசு சார்பில் பதில் சொல்லப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு நலன்கருதி அவர்கள் இருவருக்குள் இருக்கும் ஈகோவை ஓரம் கட்டி விட்டு முதலமைச்சர் ஆளுநரை சந்தித்து என்ன பிரச்சனை என்று சமூகமாக பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆளுநர் இங்கே அரசியல் செய்யக்கூடாது'' என்றார்.

Advertisment