கோவாவில் செய்தது சரியானது என்றால் கர்நாடகத்திலும் அதற்கு அனுமதிக்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சத்ருகன் சின்கா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து 104 தொகுதிகளைக் கைப்பற்றிய தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க. ஆட்சியமைத்திருக்கிறது. அம்மாநிலத்தின் 23ஆவது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றிருக்கிறார். ஆனால், 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் மற்றும் 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற ம.ஜ.த. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியுடன் ஆட்சியமைக்கக் கோருகிறது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், கர்நாடக ஆளுநரின் போக்கு ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான சத்ருகன் சின்கா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாம் எதற்காக நெருப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறோம்? ஜனநாயகத்தின் தொண்டர்கள் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நாம்தான் மொத்த எந்திரத்தையும் கேலிக்கூத்தாக்கி இருக்கிறோம். ஜனநாயகத்தைக் கொல்லும் பணநாயகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததும், விரும்பத்தகாததும் ஆகும். பொறுத்திருப்போம்.. நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும் என காத்திருப்போம். பீட்டருக்கு ஒன்று நியாயம் என்றால் பாலுக்கும் அதேதான் தர்மம். மேகாலயா, கோவா மற்றும் மணிப்பூரில் நீங்கள் (பா.ஜ.க.) செய்தது சரியென்றால், கர்நாடகாவில் காங்கிரஸ், ம.த.ஜ. கூட்டணி செய்ததும் சரியாகத்தான் இருக்கும். கர்நாடகா மற்றும் ஜனநாயகத்தைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். ஜெய்ஹிந்த்’ என பதிவிட்டுள்ளார்.
We shall wait and watch. In the present situation, one really wishes that ultimately justice prevails. What is right for Peter should be right for Paul too. What is right for Meghalaya, Manipur & Goa should be right for Karnataka too !! God save Karnataka & Democracy! Jai Hind !!
— Shatrughan Sinha (@ShatruganSinha) May 17, 2018
கோவா, மணிப்பூரில் காங்கிரஸும், பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளமும் தனிப்பெரும் கட்சிகளுக்கான அந்தஸ்துடன் இருப்பதால், ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.