தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், மொழிப்போராட்டக் கள வீரருமான ரகுமான்கான் அண்மையில் காலமானபோது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அத்தனை நிர்வாகிகளும் அவரது நினைவைப் போற்றி அஞ்சலி செலுத்தினர். தி.மு.க.வின் சிறுபான்மை சமுதாய அடையாளமாக திகழ்ந்தவர் ரகுமான்கான். அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்திற்கு மலர் தூவப்பட்டதுடன், ரகுமான்கான் வீட்டிற்கும் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.
ரகுமான்கான் மகன் டாக்டர் சுபேர்கான், சென்னையில் புகழ்பெற்ற எலும்பு அறுவை சிகிச்சை நிபுணராக (Ortho Surgeon) உள்ளார். தந்தையைப் போலவே திராவிட இயக்க உணர்வு-தமிழ் மொழிப்பற்று கொண்ட சுபேர்கான், தன் தந்தை மறைவுக்குப்பிறகு, கட்சியினரின் விருப்பத்திற்கிணங்க அரசியலிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
டாக்டர் சுபேர்கான் ஏற்பாட்டில், வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று (27-9-2020) சென்னை ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெறும் நிகழ்வில் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உள்பட 300 பேருக்கு கரோனாகால மருத்துவ கிட்களை வழங்கவிருக்கிறார் மு.க.ஸ்டாலின். கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்க உள்ள இந்த நிகழ்வு, ரகுமான்கான் மகனின் அரசியல் நுழைவுக்கான முதல் நிகழ்வாக அமையும் என்கிறார்கள் தி.மு.க.வினர்.