
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இறுதியாக இந்த தொடர் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இத்தகைய சூழலில் தான் இந்த ஆண்டுக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் என மொத்தமாக 8 அணிகள் விளையாடின.
அதன்படி கடந்த 19ஆம் தேதி (19.02.2025) தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று (02.03.2025) மோதின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் 98 பந்துகளில் 79 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 பந்துகளில் 45 ரன்களும், அக்சர் பட்டில் 61 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 250 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த எளிய இலக்கை கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 206 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்துள்ளது.
நியூசிலாந்து அணியில் கேன் வில்சன் 120 பந்துகளில் 81 ரன்களும், மிச்சல் 31 பந்துகளில் 28 ரன்களும், வில்யங் 35 ப்ந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர். எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். மேலும் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. நாளை மறுநாள் (04.03.2025) துபாயில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. அதே போன்று மார்ச் 5ஆம் தேதி லாகூரில் நடைபெறவிருக்கும் 2வது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.