Skip to main content

“கச்சத்தீவு பற்றிய கப்ஸா கதைகளை பேசுவதை நிறுத்துங்கள் ஆளுநரே” - அமைச்சர் பதிலடி!

Published on 02/03/2025 | Edited on 02/03/2025

 

Minister Regupathy says Stop telling stories about Katchatheevu Governor 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்குச் சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அங்குள்ள மீனவர்களை இன்று (02.03.2025) சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன். நமது வறியநிலை மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்குக் காரணமான மிகவும் உணர்திறனற்ற கடந்த 1974ஆம் ஆண்டு  அநியாயமான ஒப்பந்தத்தால்  பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன. அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது.

இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும், ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை மாநில அரசு  மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்குப் பெரிதும் உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக, 1974இல் நடந்த தவற்றுக்குச் சம பொறுப்பு, அன்றைய மத்திய ஆட்சி கூட்டணியில் இருந்த இன்று மாநிலத்தை ஆளும் கட்சிக்கும் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எக்ஸ் சமூக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கச்சத் தீவை வைத்து கச்சைக் கட்ட முயல்கிறார் ஆளுநர் ரவி. ‘கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமையைப் பறித்ததற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம். 1974 தவறுக்கு அப்போது மத்தியில் கூட்டணியில் இருந்த இன்றைய மாநில ஆளுங்கட்சிக்கும் பொறுப்பு’ எனத் துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார் ஆளுநர் ரவி. தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2024ஆம் ஆண்டில் 528 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 53 மீனவர்கள் கைதானார்கள்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் வாயிலாக வலியுறுத்தியும் , திமுக கூட்டணி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்தும் தமிழக மீனவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசின் இயலாமையை மறைக்க ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசு மீது வீண் அவதூறு பரப்பி வருகிறார். கச்சத்தீவு தொடர்பாகக் திமுகவின் மீது வீண் அவதூறு பரப்பும் விஷமிகளுக்குக் திமுக மூத்த முன்னோடிகளும்,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பலமுறை விளக்கம் கொடுத்துவிட்டனர். இருந்தாலும் எத்தனை விளக்கம் கூறினாலும் விளங்காத ஆளுநர் ரவிக்கு மீண்டும் சொல்கிறேன்.

Minister Regupathy says Stop telling stories about Katchatheevu Governor 

கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதற்கான ஆதாரத்தைக் கொடுத்ததே அப்போதைய திமுக தலைவரும், முதலமைச்சருமான கலைஞர் தான். அதோடு  நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து அவையை விட்டு வெளியேறியது திமுக. அதுமட்டுமல்லாது கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி அப்போதைய திமுக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த வரலாற்று உண்மைகள் எல்லாம் வரலாற்றைப் படிப்பவர்களுக்குத் தெரியும் ஆனால் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டியில் வரும் வதந்திகளை வரலாறாக நினைத்துப் படிக்கும் ஆளுநர் ரவிக்கு இதெல்லாம் தெரியாதுதான்.

கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கச்சத்தீவு பற்றி ஒரு ஆர்.டி.ஐ. (RTI) ஆவணம் வெளியாகி உள்ளதாகச் சொல்லி புரளியைக் கிளப்பி குறளி வித்தை காட்டினார் தமிழக பாஜக மாநில தலைவர். அதனைப் பிரதமர் மோடி முதல் வெளியுறவுத் துறை அமைச்சர் வரை உண்மையாக்க முயன்றார்கள். கச்சத்தீவு பற்றிக் கடந்த 10 ஆண்டுகளாகப் பேசாத மோடி, திடீர் புரட்சியாளராக மாறி தேர்தல் பிரசாரத்தில் பேசினார். ஆனாலும் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி தோற்றுப் போனது. புஸ்வாணம் ஆன விவகாரத்தை இப்போது ஆளுநர் ரவி தூக்கிக் கொண்டு வந்து கலர் மத்தாப்பு காட்ட முயல்கிறார். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு மட்டுமல்லாது தென்னிந்தியா முழுமையும் வஞ்சிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய விவகாரம் இந்திய முழுமைக்கும் பேசு பொருளாகியிருக்கிறது.

Minister Regupathy says Stop telling stories about Katchatheevu Governor 

தெலங்கானா, கர்நாடக மாநிலங்கள் எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றன. எங்கே இந்திய முழுமைக்கும் அது எதிரொலித்துவிடப் போகிறது என்ற அச்சத்தில் அதனைத் திசை திருப்ப ஒன்றிய அரசின் அஜெண்டாவை நிறைவேற்றக் கச்சத் தீவைக் கையில் எடுத்திருக்கிறார் ஆளுநர் ரவி. 1974இல் போன கச்சத்தீவைப் பற்றி கவலைப்பட்ட பிரதமர் மோடி அவர் கண் முன்னே இந்தியாவின் 2000 சதுர கி.மீ பகுதிகள் சீனா ஆக்கிரமித்த போது அமைதியாக இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில், ‘அறிவியல் பூர்வமாகவும், சட்டப்படியும் அணுகி கச்சத்தீவைக் கண்டிப்பாக மோடி அரசு மீட்கும்’ என்று சொன்னவர்கள் எங்கே போனார்கள்?. தேர்தல் வரும்போதெல்லாம் கச்சத் தீவு கேடயத்தைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள்.

இப்போது தொகுதி மறுசீரமைப்பில் பாஜகவின் சதித் திட்டம் அம்பலத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகக் கச்சத் தீவை மீண்டும் கிளப்புகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்த அடி ஆளுநருக்கு நினைவு இருக்கிறதா?. அப்படியான பதிலடியைத் தொகுதி மறுசீரமைப்பிலும் கிடைக்கும். கச்சத் தீவு பற்றிய கப்ஸா கதைகளை பேசுவதை நிறுத்துங்கள் ஆளுநரே. இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களை விடுதலை செய்ய உங்கள் எஜமானர் மோடியிடம் கோரிக்கை வையுங்கள். அரசியல் செய்ய  தமிழக பாஜக மாநில தலைவர் இருக்கிறார். ஆளுநர் அவரோடு போட்டியிட வேண்டாம்” எனக் காட்டமாக தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்