
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் அக்கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து, பரந்தூரில் புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களை அண்மையில் சந்தித்திருந்தார். அதோடு அக்கட்சி கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி (02.02.2025) 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்த தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து, த.வெ.க.வின் கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தார்.
இதற்கிடையே கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்தார். மேலும் பிரபல அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக த.வெ.க.வின் 2ஆம் ஆண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த 26ஆம் தேதி (26.02.2025) நடைபெற்றது. இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலைவர் விஜயால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கட்சியின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரைக் கட்சித் தலைவர் விஜய் அறிவித்து, கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்று மற்றும் ஊக்கத் தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கட்சி ஆண்டு விழா எனத் தமிழக வெற்றிக் கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களாகச் சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷமக் கருத்துகளைத் திணிக்கும் பணியைச் செய்து வருகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயால் அல்லது அவரின் ஒப்புதலோடு தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்பதைக் கழகத் தலைவர் விஜய்யின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன். எனவே அதிகாரப்பூர்வமற்றவர்கள் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளைத் தமிழக மக்களும் கட்சித் தொண்டர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ள்ளார்.