கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். தற்பொழுது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது யுஏபிஏ (உபா) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''கோயம்புத்தூரில் இருக்கும் ஜமாத் அவர்களுக்கு பாஜகவின் பாராட்டு. காரணம் எப்பொழுதுமே தீவிரவாதம் என்பது மதத்தைச் சேர்ந்தது கிடையாது. பாஜக அப்படி சொல்லாது. இதில் கைது செய்யப்பட்டவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கலாம் அதற்காக எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை பாஜக சொல்லாது. ஜமாத் இந்த மாதிரி எங்களுடைய சமுதாயத்தின் பெயரை முபீன் இழிவுபடுத்தி இருக்கிறார். நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்லி இருப்பது தமிழக மண்ணில் வரவேற்கப்பட வேண்டிய ஒரு செய்தி.
மதகுருமார்கள் எல்லோரும் இதுபோன்று பேசும்போது மூளைச் சலவைக்கு உள்ளாகும் இளைஞர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இது சாதாரணமாக நிகழ்ந்ததல்ல. ஒரு மனிதரே 55 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், அம்மோனியா, சோடியம் எல்லாத்தையும் சோர்ஸ் பண்ணினார் என்பது கிடையாது. நமக்கு தெரியும் டெரர் மாட்யூலை பொறுத்தவரை நியூட்டினோ பிராசஸில் தான் ஆப்ரேட் பண்ணுவார்கள். கார் ஒருத்தருடையது, பால்ரஸ் ஒருத்தருடையது, எக்ஸ்ப்ளோஷர் ஒருத்தருடையது. இவையெல்லாம் ஒரு வீட்டில் ஜாயின்ட் ஆகும். ஓட்டுகின்ற டிரைவருக்கும் காரில் என்ன இருக்கும் தெரியாது. இதுதான் நியூட்டினோ பிராசஸ். ஏனென்றால் ஒரே மனிதருக்கே இதெல்லாம் தெரிந்துவிட்டால் திட்டம் கொலாப்ஸ் ஆகிவிடும். அப்படி இருக்கும் பொழுது ஜமேசா முபீனே வண்டி, ஜமேசா முபீனே சிலிண்டர், ஜமேசா முபீனே எக்ஸ்ளோசர் கொண்டு வந்தார் என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. டிஜிபியினுடைய பிரஸ்மீட் குழந்தைத்தனமாக இருந்தது. அவர் சொல்வதை நாம் நம்ப வேண்டும் என்று வேறு டிஜிபி நினைக்கிறார். இதில் ஐந்து பேர் நேரடி சம்பந்தம் உடையவர்கள். இன்னும் இதற்குள் 8 பேரை கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இதைப் பற்றி தெரியும். ஆனால் அந்த பிரஸ் நோட்டில் மொத்தமாக 13 பேரை அவர்கள் காட்டி இருக்க வேண்டும். இன்னும் எட்டு பேரை காட்டாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. 13 பேரை பிக் பண்ணி அதில் ஐந்து பேரை மட்டும் காட்டுகிறீர்கள் என்றால் மிச்சம் உள்ள எட்டு பேரை என்ன பண்ணப் போகிறீர்கள்'' என்றார்.