நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெற்றது. இதனையொட்டி மாலை 4 மணிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த ராம்ப் வாக் மேடையில் ராம்ப் வாக் சென்றார். அப்போது அங்கிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், ‘தளபதி, தளபதி’ என முழக்கமிட்டு உற்சாகப்படுத்தி வரவேற்பு அளித்தனர். மேலும் தொண்டர்கள் அவரை நோக்கி வீசிய அக்கட்சியின் துண்டை வாங்கி தோளில் அணிந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
அதன் தொடர்ச்சியாக மாநாட்டு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக் கம்பத்தில் அக்கட்சியின் கொடியை விஜய் ஏற்றினார். பின்னணியில் கட்சியின் பாடல் இசைக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி ததும்ப த.வெ.க கொடியை விஜய் ஏற்றி வைத்தார். இதனையடுத்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் கட்சியின் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த உறுதிமொழியை அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் வாசிக்க விஜய், தொண்டர்கள் மற்றும் மேடையில் இருந்த கட்சியின் நிர்வாகிகளும் தங்கள் வலது கையை நெஞ்சில் வைத்தபடி இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். இதனையடுத்து அக்கட்சியின் நிர்வாகி சம்பத்குமார் த.வெ.க. கொள்கையை வாசித்தார்.
இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில், “எங்களைப் பொறுத்த வரை மக்களுக்கு நல்லது என்றால் எங்களுக்கும் நல்லது தான். இலக்குகள் எங்கள் வழிகாட்டி தீர்மானிக்கின்றன. அரசியல் தெளிவு தான் எங்களுடைய நிர்வாக செயல்முறையாக இருக்கும். அரசியல் கொள்கை, நிலைப்பாடு எல்லாமே எதார்த்தமானதாக இருக்க வேண்டும். மாற்று அரசியல் மாற்று மாற்றுச் சக்தி இந்த ஏமாற்று வேலை எல்லாம் செய்யப் போறது இல்லை. ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகளில் பத்தோடு பதினொன்றாக மாற்றுச் சக்தி என்று சொல்லிக்கிட்டு எக்ஸ்ட்ரா லக்கேஜ் - ஓடு எல்லாம் வரவில்லை ப்ரோ. நாட்டிற்குச் சேவை செய்கிறேன், வேலையெல்லாம் எளிதாகச் செய்து கொண்டு மாபெரும் சக்திகளாக நினைத்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய ஏமாற்று சக்திகளின் பிடியில் இருந்து தமிழ்நாட்டின் முழுமையாக மாற்ற முதன்மை சக்தியாக இருப்பேன். உங்களுடைய மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக, உங்களில் ஒருத்தனாக உழைக்க வேண்டும் இதுதான் என்னுடைய டார்கெட்.
ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறேன். இந்த முடிவு நான் மட்டும் எடுத்த தனி முடிவு அல்ல. நாங்கள் எடுத்த முடிவு. எதற்கும் தயாராக, நமது கூட நிற்கிற இந்த மாபெரும் சக்தியோடு சேர்ந்து எடுத்த முடிவு. அதனால் எப்போதும் சொல்கிறோம், கூட்டணி குடும்பமாகச் சேர்ந்தோம். ஏமாற்ற வந்த கூட்டம் எல்லாம் இல்லை. கொள்ளையடிக்க வந்த கூட்டம் அல்ல. இந்த பதவியைக் கையில் வைத்துக்கொண்டு பகைத் தீர்க்கும் கூட்டம் அல்ல. பக்கா பிளானோட மக்கள் நலன் சம்பந்தப்பட்டது. சமூக வலைத்தளத்தில் கம்பு சுத்த வந்த கூட்டம் என்று நினைத்து விடாதீர்கள். சமூகத்திற்காக வாள் ஏந்தி நிற்கக்கூடிய கூட்டம். மண்ணை வாழ வைப்பதற்காக அரசியலுக்கு வந்து நிற்கக்கூடிய கூட்டம். இந்த மாபெரும் கூட்டம் பணத்திற்காகக் கூட்டப்பட்ட கூட்டம் அல்ல.
சமூக ஊடகங்களில் கிண்டல் செய்வது, ஆபாசம் மற்றும் அவதூறு பரப்புதல், பயாஸ்கோப் காண்பிப்பது, ஏ டீம், பி டீஎம் என்று பொய் பிரச்சாரம் செய்து படையை வீழ்த்தி விடலாம் என்ற கனவிலும் நினைத்துப் பார்த்து விடாதீர்கள். இங்கே உள்ளார்கள் மட்டுமே நம்முடைய சொந்த பந்தம் என்று நினைத்து விடாதீர்கள். சொந்தம், நட்பு, உறவுகள் இன்றும் இருக்கிறார்கள். இங்கு வர முடியாமல் தமிழ்நாட்டில் அக்கம் பக்கம் மாநிலத்தில் உள்ளவர்கள், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நமக்கான ஒரு குடும்பமாகச் சேர்ந்து ஒரு முடிவுடன் காத்திருக்கிறார்கள்.
இவர்களை எல்லாம் சேர்த்ததுதான் நம்முடைய அதிகாரம். யாராவது வந்து விடமாட்டார்களா, யாராவது நல்லது செய்து விட மாட்டார்களா என ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டைப் பற்றி அதனுடைய வளர்ச்சி பற்றியும் ஒரு ஏக்கத்தோடு இருக்கிற மக்களுக்கானது தான் த.வெ.க.. ஊழல்வாதிகளைச் சந்திக்கிற நாள் வெகு தூரத்தில் இல்லை இதோ இப்ப என்பதற்குள் வந்துவிடும் 2026. எலக்சன் கமிஷன் போருக்கான நாளை குறிக்கும். அன்னைக்கு அந்த தேதியில் ஒட்டுமொத்த மக்களும் 234 தொகுதிகளிலும் டி.வி.கே. சின்னத்திற்காக அழுத்த போற ஒவ்வொரு வாக்கும் அணுகுண்டாக மாறும் . இது நடக்கும்.”எனத் தெரிவித்தார்.