Skip to main content

“உங்கள் பாரத்தை என் முதுகில் ஏற்றியுள்ளீர்கள், கவலைப்படாமல் செல்லுங்கள்!” - மு.க. ஸ்டாலின் பேச்சு! 

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

DMK MK Stalin speech at thiruvannamalai


“அரை நூற்றாண்டு காலத்தை தமிழ்நாட்டு மக்களோடு கழித்தவன் நான். அவர்களது சுக துக்கங்களில் பங்கெடுத்தவன் நான். தமிழ்நாட்டின் எந்தப் பகுதி மக்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் நீளும் கரம் என்னுடைய கரமாகத்தான் இருக்கும். முதலில் சென்று அவர்களைப் பார்க்கும் மனிதனாக நான்தான் இருப்பேன். என்னை நம்புங்கள்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

 

திருவண்ணாமலை மாவட்டம், திருக்கோவிலூர் சாலை நகராட்சி அலுவலகம் எதிரில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற மக்களின் குறை கேட்கும் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணத்தை ஜனவரி 29ஆம் தேதி தொடங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

 

இந்நிகழ்ச்சியில் பேசும்போது, “உங்கள் எல்லோரையும் பார்ப்பதற்காகவும், உங்களுடைய குறைகளைக் கேட்பதற்காகவும்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். இப்போது நீங்கள் இங்கு திரண்டு இருக்கிறீர்கள். எதிர்பார்த்ததைவிட மிக எழுச்சியோடு, ஆர்வத்தோடு, ஆரவாரத்தோடு இங்கே வந்திருக்கிறீர்கள்.

 

நீங்கள் அனைவரும் இங்கு வந்தவுடன், வாயிலிலேயே உங்கள் குறைகளைப் பதிவு செய்துவிட்டீர்களா? பதிவு செய்தவுடன் உங்களிடத்தில் ஒரு ரசீது கொடுக்கப்பட்டிருக்கும். அந்த ரசீதை வாங்கத் தவறியிருந்தால் தயவுசெய்து வெளியில் செல்லும்போது, பதிவு செய்த இடத்தில் மறவாமல் வாங்கிச் செல்லுங்கள். ஏனென்றால் அது சாதாரண ரசீது அல்ல. அந்த ரசீதை வைத்துக்கொண்டு நீங்கள் என்னிடத்தில் கேள்வி கேட்கலாம். உங்கள் மனுக்கள் அனைத்தும் இந்த மேடையில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடப்பட்டுள்ளன.

 

கண்களில் கனவுகளோடும், கையில் மனுக்களோடும், இதயத்தில் ஏக்கத்துடனும் இந்த அரங்கத்தை நோக்கி வந்திருக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான வணக்கத்தையும் நன்றியையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு என்னால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அடுத்தவர் நம்பிக்கையைப் பெறுவதுதான் ஒரு மனிதனின் மாபெரும் சொத்து. இவர் நல்லவர், நம்பிக்கையானவர், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார். இவரை நம்பி நம்முடைய கோரிக்கையை வைக்கலாம் என்று உங்களிடம் நான் நம்பிக்கையைப் பெற்றதைத்தான் என்னுடைய சொத்தாகக் கருதுகிறேன். இத்தகைய நம்பிக்கையைப் பெறுவது சாதாரணமான விஷயம் அல்ல. நீங்கள் எத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். உங்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் என்ற வாக்குறுதியைத் திருவண்ணாமலையில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

 

உங்கள் கவலைகளை, உங்களது கோரிக்கைகளை, உங்களது எதிர்பார்ப்புகளை, என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள். இனி இவை என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். இவற்றுக்கு திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன். 

 

கடந்த 25ஆம் தேதி காலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களின் முன்னால் நான் ஒரு சபதம் எடுத்தேன். மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு. இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளித்த உறுதிமொழி. அந்த உறுதிமொழியின்படி அமைக்கப்பட்ட முதல் நிகழ்ச்சியை திருவண்ணாமலையில் இருந்து தொடங்கி இருக்கிறேன்.

 

14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி திருவாரூர் மண்ணில் தமிழ் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்தான், 95 வயது வரைக்கும் இந்த தாய்த்தமிழ் நாட்டுக்காக அயராது உழைத்த வாழ்நாள் போராளி! போராளி மட்டுமல்ல, மிகச்சிறந்த நிர்வாகி. அவரால் உருவாக்கப்பட்ட மாநிலம் தான் இந்த தமிழ்நாடு. அத்தகைய தலைவர்தான் சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் என்று சொன்னார். அவரது வழியில் இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான். செய்வதைத்தான் சொல்வான் என்ற உறுதிமொழியை நான் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் இருந்து எடுத்துக் கொண்டேன்.

 

திமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று சொன்னார் தலைவர் கலைஞர், செய்தார். திமுக ஆட்சி அமைந்ததும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரப்படும் என்று சொன்னார், செய்தார். திமுக ஆட்சி அமைந்ததும் ரூ.7,000 கோடி விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னார் செய்தார். திமுக ஆட்சி அமைந்ததும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும் என்று சொன்னார், செய்தார். அத்தகைய தலைவரின் மகன் நான். நானும் வாக்குறுதி அளிக்கிறேன். 100 நாட்களில் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன்.

 

14 வயதில் கோபாலபுரம் இளைஞர் திமுகவை ஆரம்பித்து மக்கள் பணியாற்றத் தொடங்கியவன் நான். அரை நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தில் என் கால் படாத கிராமங்களே இல்லை, பயணம் செல்லாத நகரங்களே இல்லை. இந்த அரை நூற்றாண்டு காலத்தை தமிழ்நாட்டு மக்களோடு கழித்தவன் நான். அவர்களது சுக துக்கங்களில் பங்கெடுத்தவன் நான். தமிழ்நாட்டின் எந்தப் பகுதி மக்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் நீளும் கரம் என்னுடைய கரமாகத்தான் இருக்கும். அவர்களை முதலில் சென்று பார்க்கும் மனிதனாக நான்தான் இருப்பேன், எங்களை எல்லாம் அப்படித்தான் தலைவர் வளர்த்தார்.

 

cnc

 

வளர்ச்சி மிகு தமிழகத்தை உருவாக்க நான் திட்டமிட்டுள்ளேன். பல்லாயிரம் கோடி செலவு செய்து தொழில் நிறுவனங்களை உருவாக்குவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் கவலையின்றி வாழ, ஒவ்வொரு தனிமனிதனும் அதிமுக அரசால் அடைந்த துன்பங்களை திமுக ஆட்சி அமைந்ததும் அதனைத் துடைக்கும், துடைக்க வேண்டும். கடந்த பத்து ஆண்டு காலத்தில் தமிழகம் எல்லாத் துறையிலும் எல்லா வகையிலும் அதலபாதாளத்துக்குப் போய்விட்டது. இந்த அதிமுக ஆட்சியில் எந்தத் தரப்பு மக்களும் நிம்மதியாக இல்லை. எந்தத் தொகுதிக்கும் எந்தப் புதிய திட்டங்களும் இல்லை. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தொகுதிகள் கூட கேவலமாக இருக்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளை இவர்கள் தங்கள் தொகுதிக்குக் கூடச் செய்து தரவில்லை.

 

மக்கள் பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்க திமுகவால் தான் முடியும் என்ற நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்களையும் இன்று வழங்கியிருக்கிறீர்கள். மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் மக்களை நான் சந்திக்கிறேன். திமுக அரசாங்கம்தான் வரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் நீங்கள் கொண்டுவந்த படிவங்களை, இப்போது என் முதுகில் ஏற்றிவிட்டீர்கள். என்னை நம்பி ஏற்றி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லுங்கள். திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இந்தக் கோரிக்கையை வைத்துள்ள உங்களுக்கு நான் சொல்வது, ஆமாம், திமுக ஆட்சிதான் அமையும். உங்கள் கவலைகள் யாவும் தீரும், என்ற வாக்குறுதியை மீண்டும் நான் வழங்குகிறேன்.

 

உங்களுடைய அனைத்துப் பிரச்சனைகளும் எனக்குப் புரிகின்றன. உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் உங்கள் முன்னால் இந்தப் பெட்டியில் போட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனுடைய சாவி என்னிடம்தான் இருக்கப்போகிறது. இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தேர்தல் நடக்கப்போகிறது. தேர்தல் முடிந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்று, நான் பதவிப் பிரமாணம் எடுத்த அடுத்த நாள் இந்தப் பெட்டியை நானே திறப்பேன். இந்த மனுக்கள் அனைத்தும், ஏற்கெனவே நான் சொன்னதுபோல, இதற்கென தனிப் பிரிவு அமைக்கப்பட்டு, இந்த அடிப்படை பிரச்சனைகள் அனைத்தையும் முன்னுரிமை கொடுத்துத் தீர்த்து வைப்பேன், கவலைப்படாதீர்கள். நான் கலைஞரின் மகன் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். நம்பிக்கையோடு செல்லுங்கள்” என்றார். 

 


படம் - எம்.ஆர்.விவேகானந்தன்

 

 

சார்ந்த செய்திகள்