Skip to main content

திமுக வளர்ச்சிப் பணிகளில் பம்பரம் போல் பணியாற்றவர் ராதாமணி - ஸ்டாலின் இரங்கல்

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு. ராதாமணி (67). புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ கு.ராதாமணி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், மறைந்த எம்.எல்.ஏ ராதாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், க.பொன்முடி,  ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

 

கு.இராதாமணி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

 

விழுப்புரம் மத்திய மாவட்ட அவைத்தலைவரும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினருமான திரு ராதாமணி  அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக  திடீரென்று மறைந்தார் என்ற பெருந்துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


  Vikravandi  DMK MLA Rathamani


 
விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு ராதாமணி கண்டமங்களம் ஒன்றிய கழகச் செயலாளராக ஆறு முறையும், விழுப்புர மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும் மிகச்சிறப்பாகப் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகளில் நாளெல்லாம் பம்பரம் போல் பணியாற்றும் அவர், அறிவிக்கப்பட்ட போராட்டங்களில் அறைகூவல் விடுத்துப் பங்கேற்பவர். தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக சட்டமன்றத்தில் துணிச்சலாகவும், உறுதியாகவும் ஓங்கிக் குரல் கொடுக்கும் அவர், தலைவர் கலைஞர் அவர்களின் பாராட்டுதலைப் பெற்றவர். என் மீதும் தனிப்பட்ட பாசம் வைத்திருந்தவர். அவரது மறைவு கழகத்தோழர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும்.


 
தொகுதி மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 



 


 

சார்ந்த செய்திகள்