Skip to main content

கஞ்சா, லாட்டரி, கள்ள மதுபானம் விற்பனைதான் கரூர் அதிமுகவின் சாதனை..! -செந்தில் பாலாஜி அதிரடி..!

Published on 04/04/2021 | Edited on 04/04/2021
ttttt

 

கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். 

 

அப்போது அவர், கரூர் மாவட்டத்தில் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. லாட்டரி சீட்டு கொடி கட்டி பறக்கிறது. அதிமுகவைச் சேர்ந்த ஒருவர்தான் 7 மாவட்டங்களுக்கு இதனை செய்கிறார். கரூரில் கஞ்சா மிகவும் கொடி கட்டி பறக்கிறது. கள்ள மதுபானம் கொடி கட்டி பறக்கிறது. இதனை நடத்துவதும் அதிமுகவினர்தான். ஆற்றுப் படுகைகளில் இரவுகளில் பொக்கலின் இயந்திரங்களை வைத்து நூற்றுக் கணக்கான லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

 

இதனை அப்பகுதியில் உள்ள மாட்டு வண்டிக்காரர்கள் மறித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்கள். ஏன் பாஜகவினரும் அதனை தடுத்து நிறுத்தி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்கள். புகார் கூறினார்கள். ஆனால் மறுநாள் அந்த லாரிகளும், பொக்கலின் இயந்திரங்களும் விடுவிக்கப்பட்டன. குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு லாரியை பிடித்து கொடுக்கிறார்கள் பொதுமக்கள். அடுத்த நாள் அந்த லாரி விடுவிக்கப்படுகிறது. சட்டத்திற்கு புறம்பாக அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சியில் இருப்பவர்கள் கொள்ளையடிக்கிறார்கள். 

 

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் பேசி வருகிறாரே?

 

கட்டிடம் இருந்தாதானே அசைக்கறதுக்கு. வெறும் தரைதானே இருக்கு. வெறும் தரையை ஏன் அசைக்கணும். பொறுத்திருந்து பாருங்கள் திமுக கூட்டணி வெற்றி பெறும். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் வேலை வாய்ப்பை உருவாக்கினார்களா? ஏன் உருவாக்கவில்லை. படித்தவர்களுக்காக இந்த அரசு என்ன செய்திருக்கிறது. அவர்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்திருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு ஒரு விஷமப் பிரச்சாரத்தை அரங்கேற்றி வருகிறார். எங்கள் தலைவர் 100 சதவிகிதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடனே மனுக்களுக்கு தீர்வு கொடுப்பதாக கூறியிருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் மனு அளித்துள்ளனர். ஏன் ஆட்சியாளர்களிடம் இந்த பொதுமக்கள் அந்த மனுக்களை கொடுக்கவில்லை. ஆட்சியாளர்களை பொதுமக்கள் நம்பவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. 

 

நானும் எடப்பாடி பழனிசாமியும் ஒரே நாளில்தான் மந்திரியானோம். எங்கள் தலைவரோடு ஒப்பிட்டு பேச எடப்பாடி பழனிசாமி தகுதியில்லாவர். முட்டிப் போட்டு முதல்வரானவர்தான் எடப்பாடி பழனிசாமி எங்கள் தலைவரின் உழைப்பும், எடப்பாடி பழனிசாமியின் உழைப்பும் ஒன்றல்ல. மக்களும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு கூறினார். 

 

சார்ந்த செய்திகள்