
மறைத்து வைத்த காலணியை வாங்க ரூ.50,000க்கு பதிலாக மணமகன் ரூ.5,000 கொடுத்ததால் இரு குடும்பங்களுக்கு இடையே சண்டை ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஷபீர். இவருக்கு, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, மணமகள் இல்லமான பிஜ்னோருக்கு, கடந்த 5ஆம் தேதி மணமகன் முகமது ஷபீர் திருமண ஊர்வலமாக வந்தார். இதையடுத்து, திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தது.
அப்போது மணமகளின் மைத்துனி, முகமது ஷபீரில் காலணிகளை விளையாட்டாக மறைத்து வைத்து, காலணிகளை திரும்ப பெற வேண்டுமென்றால் ரூ.50,000 கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் முகமது ஷபீர், மணமகளின் மைத்துனிக்கு ரூ.5,000 மட்டுமே கொடுத்துள்ளார். இதனை கண்ட மணமகளின் குடும்பத்தில் உள்ள சில பெண்கள், பிச்சைக்காரன் என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், இரு குடும்பங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் சண்டையாக மாறியது. இதில், மணமகன் குடும்பத்தினரை ஒரு அறையில் அடைத்து வைத்து மணமகளின் குடும்பத்தினர் தடிகளால் அடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ், இரு தரப்பினரையும் சமாதனப்படுத்தியது. மேலும், இரு குடும்பங்களுக்கு இடையே ஒரு தீர்வு அளிக்கப்பட்டு அங்கிருந்து சென்றனர்.