
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தக்கம் தென்னரசு 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மாதம் 14 ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்றும் தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது பேசுவதற்கு அதிமுக உறுப்பினர்களுக்கு10 நிமிடமும், மற்ற உறுபினர்களுக்கு 8 நிமிடமும் ஒதுக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த கன்னியாகுமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் ஒதுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி 15 நிமிடத்திற்கும் மேலும் தனது பேச்சைத் தொடர்ந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு அவ்வப்போது குறுக்கிட்டு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது என்று அறிவுறுத்தினார். இருப்பினும் தளவாய் சுந்தரம் தொடர்ந்து பேச்சை தொடர்ந்ததால் ஒரு கட்டத்தில் அவரின் மைக்கின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுக உறுப்பினர் இன்னும் சிறிது நேரம் மட்டும் தளவாய் சுந்தரம் பேசுவதற்கு ஒதுக்கித் தரும்படி அவையில் கூட்டலிட்டனர்.
இதனைப் பார்த்து கோவமடைந்த அமைச்சர் துரைமுருகன், “எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் எவ்வளவு நேரம் பேச அனுமதிக்கலாம் என்று ஒரு முறை முடிவு செய்துவிட்டால் அதில் இருந்து எப்போதும் பின்வாங்கக்கூடாது” என்று சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு சிரித்தபடியே ‘சரியாக சொன்னீர்கள்’ என்று அடுத்த உறுப்பினரை பேசுமாறு அறிவுறுத்தினார்.
அதன்பிறகு பேசிய அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி, தளவாய் சுந்தரத்தின் மை இணைப்பு துண்டிக்கப்பட்டதைச் சுட்டிக்கட்டி, “நாங்கள் ஆளும் கட்சியாக இருந்த போது, நீங்களும்(எதிர்க்கட்சியாக இருந்த போது) அதிக நேரம் பேசியிருக்கிறீர்கள்” என்றார். அதற்கு அமைச்சர் துரைமுருகன், “எங்களுக்கும் சேர்த்துத்தான் நான் இதைச் சொல்கிறேன்” என்று கூறி பிரச்சனையை முடித்து வைத்தார்.