
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் அக்கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து, பரந்தூரில் புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களைச் சந்தித்திருந்தார். அதோடு அக்கட்சி கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி (02.02.2025) 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் துவக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி (26.02.2025) நடைபெற்றது.
மேலும் அக்கட்சியின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். அதோடு அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி (28.03.2025) சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. இதற்கிடையே விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஒய் பிரிவில் சி.ஆர்.பி.எப். (C.R.P.F. - Central Reserve Police Force) வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என மொத்தமாக 8இலிருந்து 11 பேர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர் எனத் தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த உத்தரவில் தமிழ்நாட்டிற்குள் மட்டும் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மார்ச் 14ஆம் தேதி விஜய்யின் இல்லத்தில் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது தொடர்பான இறுதிக் கட்ட ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் விஜய்க்கு ஓய் பிரிவு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர், முக்கியத் தலைவர்கள் எனப் பல்வேறு பிரிவினருக்கும் உளவுத்துறையினர் அளிக்கும் அறிக்கையில் படி எக்ஸ். ஒய், இசட் என்ற பிரிவின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.