பா.ஜ. அரசு தமிழகத்தில் "தமிழகத்தில் "ராணுவ தளவாட உற்பத்தி கேந்திரங்கள்" அமைக்க நிதிநிலை அறிக்கையில் அறிவித்த கையோடு சென்னை "டிபென்ஸ் எக்ஸ்போ" நடத்துகிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள "ராணுவ தளவாட உற்பத்தி கேந்திரங்களை ’’பூவுலகின் நண்பர்கள்’’அமைப்பு முழுமையாக எதிர்க்கிறது. அது குறித்தான வழ. சுந்தர்ராஜனின் விரிவான அறிக்கை:
’’கடந்த 2017ம் ஆண்டிற்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரங்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் போர்க்கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் ராணுவத்தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், உலக நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யுமளவிற்கு இந்தியா முன்னேறி இருப்பதாகவும் இதற்காக தமிழ்நாட்டிலும், உத்தரப்பிரதேசத்திலும் ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பொருளாதார வளம் மேம்படுத்தப்படும், வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பது போன்ற கருத்துகளை பாரதிய ஜனதாக் கட்சியினர் ஊடகங்கள் மூலமாக பரப்பி வருகின்றனர்.
இந்த ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரங்கள் உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்குமா என்று சிந்தித்தால், அச்சம் ஏற்படுத்தக்கூடிய பல அம்சங்களே நமக்குத் தோன்றுகின்றன.
இந்தக் கேந்திரத்தில் அமையும் தொழிற்கூடங்களுக்கு, நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்டதுபோல தேசமுக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்றுகூறி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளிலிருந்து முழுமையான விதிவிலக்கு அளிக்கப்படும். இதைத்தொடர்ந்து மக்களுக்கு உரிமையான தண்ணீர் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களும் இந்த நிறுவனங்களுக்கு எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வழங்கப்படும். அதேபோல இந்த தொழிற்கூடங்கள் வெளியேற்றும் கழிவுகளும் எவ்விதமான முறையான கட்டுப்பாடும் இல்லாமல் இந்நாட்டு நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தையும் மாசுபடுத்த சட்டபூர்வமான உரிமை வழங்கப்படும். இதனால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான சட்டபூர்வமான பாதுகாப்போ, நிவாரணங்களோ இருக்காது. இந்த ராணுவத்தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் சூழல்சீர்கேடுகள் கடும் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும்கூட அவற்றின் உரிமையாளர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வெளிநாட்டுக்காரர்களாக இருந்தால் பாதுகாப்பாக விமானம் ஏற்றி அவர்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்த ராணுவத்தளவாட உற்பத்தி கேந்திரங்களுக்கும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போலவோ அல்லது அதைவிட அதிகமான சலுகைகளோ வழங்கப்படும். இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தேவையான பணியாளர் பாதுகாப்புச் சட்டங்கள் ரத்து செய்யப்படும். இந்த ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் குறித்த விவரங்கள் மக்களுக்கோ, ஊடகங்களுக்கோ தெரிவிக்காமல் மறைக்கும் நிலை ஏற்படுத்தப்படும்.
இந்த ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரங்கள் அமையும் இடங்கள் அனைத்தும் உயர்பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்படும். மத்திய தொழிற்பாதுகாப்புப்படையின் கட்டுப்பாட்டில் இந்த பிரதேசம் முழுமையாக ஒப்படைக்கப்படும். இப்பகுதியில் பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்படும். கால்நடைகள் உள்ளிட்டவைகூட அப்பகுதியில் நடமாடுவது தடைசெய்யப்படும். இத்தடையை மீறி அப்பகுதியில் நுழையும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு தண்டனை வழங்கப்படும் நிலை ஏற்படும்.
இன்றைய இந்திய, பன்னாட்டு அரசியல் சூழலில் போர்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்ற உறுதி கூறி முடியாது. அவ்வாறு போர்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலை இருந்தால் ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரங்களுக்கு அவசியம் இருக்காது. இந்நிலையில் உலகின் எந்த நாட்டிலாவது போர் ஏற்பட்டால், அந்த நாட்டிற்கு ராணுவத்தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் இந்தியா மீதும் தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரங்களும், அணுஉலைகளும் நிறைந்திருக்கிற தமிழ்நாட்டின் மீது எவ்விதமான போர் நடவடிக்கைகளும் இருக்காது என்ற உறுதிகூற முடியுமா? இந்தியாவின் வடக்கே இருக்கும் பாகிஸ்தானும், தெற்கே இருக்கும் இலங்கையும் எப்போதும் அமைதியாக இருக்கும் என்று சொல்லமுடியாது. ஏனெனில் இந்த இருநாடுகளுமே இந்தியாவைவிட சீனாவை நட்புநாடுகளாகக் கொண்டுள்ளன. இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் முற்றிலுமாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது நமது பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்தும் அம்சமாகும். இந்நிலையில் எங்கு "போர் மேகம்" உருவானாலும் அதனால் பெய்யப்போகும் "அமில மழை" பெய்ய ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரமாக இருக்கும் தமிழ்நாடாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
ராணுவத்தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களும், தரகர்களும், அரசியல்வாதிகளும் லாபம் ஈட்டுவதற்காக தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்த வேண்டுமா?
இதையெல்லாம்விட முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ், ராணுவத்தளவாடம் மற்றும் போர்க்கப்பல் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்காக சில நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டிடமிருந்து இந்தியா வாங்கிய ரஃபேல் விமானங்கள் குறித்த சர்ச்சை உங்களுக்கு தெரிந்திருக்கும். இதற்கான ஒப்பந்தத்தின்படி இந்த ரஃபேல் விமானங்களுக்கான உதிரிபாகங்களில் குறிப்பிட்ட சதவீதத்தை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் மற்றும் அந்த தொழிநுட்பத்தை பரிமாற்றம் (Technology Transfer) செய்ய வேண்டும். இந்தியா சார்பில் ரஃபேல் விமானத்தின் தயாரிப்புக்கான இந்த உரிமையை பெற்றிருப்பது ரிலையனஸ் நிறுவனம். இவ்வாறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் லாபநோக்கிற்காக தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களும், உயிர்ப்பாதுகாப்பும் பணயமாக வைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் திட்டமிட்டு அழித்து மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை ஒரு முழுமையான ராணுவத்தளவாட உற்பத்திக் கேந்திரமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இதன் அரசியலை உணர்ந்து இதற்கு உரிய எதிர்வினையாற்ற வேண்டியது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், மக்கள் உள்ளிட்ட அனைவரது கடமையாகும். உண்மையான நாட்டின் வளர்ச்சி ராணுவத்தின் வளர்ச்சியில் இல்லை, அந்த மக்களின் அடிப்படை ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமே நீடித்துநிலைக்கக்கூடிய வளர்ச்சியாகும்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சர்வதேசிய சமத்துவம் பேசிய இந்த மண், மனிதர்களை அழிக்கக்கூடிய எந்த ராணுவத்தளவாட உற்பத்தியையும் ஏற்றுக்கொள்ளாது. நாங்கள் அமைதியை விருப்புகிறவர்கள், அமைதிக்கான அடையாளமாக இருக்கிறோம், அப்படியே இருந்துவிட்டு போகிறோம்.’’