தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். கைத்தறித் துறையின் முதன்மை செயலாளராக நியமித்திருக்கிறது அரசு. பள்ளிக்கல்வித் துறையின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டதிலிருந்தே அவருக்கும் துறையின் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் ஏழாம் பொருத்தம்தான். மத்திய அரசின் ஆதரவு யாதவ்விற்கு இருந்ததால் செங்கோட்டையனும் அமைதியாகவே இருந்தார்.
அரசு எடுக்கிற ஒவ்வொரு முடிவுக்கும் எதிராக செயல்படுவதே யாதவின் நடவடிக்கையாக இருந்து வந்தது. பள்ளிக்கல்வித்துறையில் அவர் நடத்திய பல சீர்கேடுகள் குறித்து ஏகப்பட்ட புகார்கள் அரசுக்கு குவிந்தபடி இருந்தன. இருப்பினும் கண்டும் காணாமல் இருந்து வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில், நேற்று (5-ந் தேதி) வெளிவந்த நமது நக்கீரனில், 'ஐ.ஏ.எஸ். ஆசி! ஆட்டிப்படைக்கும் பெண்மணி! ' என்ற தலைப்பில், பள்ளிக்கல்வித் துறையின் அவலத்தை ஒரு பக்க அளவில் செய்தி எழுதியிருந்தோம். அந்த செய்தி கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்த, நமது நக்கீரனில் வந்த செய்தியை விசாரித்து உண்மைகளை அறிந்த அமைச்சர் செங்கோட்டையன், இது குறித்து முதல்வர் எடப்பாடியிடம் விவாதிக்க, உடனடியாக பிரதீப் யாதவை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை எடுக்கிறேன் என்றவர், அது குறித்து தலைமைச்செயலர் சண்முகத்தை அழைத்து சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதனடிப்படையில், பள்ளிக்கல்வித் துறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் பிரதீப் யாதவ்!