இந்தியாவில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களில் அதன் மாநில கட்சிகள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும், பிரபலங்களும் திமுகவிற்கும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன், மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்தும், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர், “சனாதன சக்திகளின் சதிகளை முறியடித்து ஜனநாயகத்தையும் தமிழகத்தையும் காப்பாற்றிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கொள்கைக் கூட்டணியை உருவாக்கி மகத்தான வெற்றியைப் பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எமது உளமார்ந்த பாராட்டுகளை, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடும் ஒரு கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெறுவது தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். அதுமட்டுமின்றி இரண்டு பொதுத் தொகுதிகளைப் பெற்று அந்த இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றிருப்பது வரலாற்றுச் சாதனையாகும். போட்டியிட்ட ஆறு இடங்களில் நான்கு இடங்களை வென்றுள்ளோம். சனாதனத்துக்கு எதிரான போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக 4 சட்டப்பேரவை உறுப்பினர்களை வெற்றி பெறச்செய்து ஆதரவளித்த தமிழக மக்களுக்கு தலைவணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிப்பதற்காகப் பாஜகவும், அதிமுகவும் எத்தனையோ தில்லு முல்லுகளைச் செய்தன. பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டன. வாக்குகளைப் பெறவேண்டும் என்பதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களையும், பட்டியல் சமூக மக்களையும் கூறுபடுத்தி அவர்களுக்கிடையில் பகைமையை உருவாக்கின. மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தன. அனைத்துச் சதிகளையும் முறியடித்து அவர்களைப் புறம் ஒதுக்கிவிட்டுத் தமிழக மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான ஆதரவை நல்கி மகுடம் சூட்டி இருக்கிறார்கள்.
முதல்வராகப் பொறுப்பேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கரோனா பேரிடரில் இருந்து தமிழகத்தைக் காப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். கரோனா பேரிடர் காரணமாக வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கு உதவும் விதமாகக் குடும்பம் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் தருவோம் எனத் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி அந்த உதவித் தொகையை உடனே வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் பாஜக படுதோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் அமி்த்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.