நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்குப் பிறகு சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ஏற்க வேண்டும், அதேபோல் கூட்டணியின் தலைவராக அவரே இருக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தற்போது திடீரென மஹாராஷ்டிரா ஆளுநர் முன்பு மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி. காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி. மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி!
— Dr S RAMADOSS (@drramadoss) November 23, 2019
இது தொடர்பாக பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதீய ஜனதா. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி. காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி. மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி!” என்று குறிப்பிட்டுள்ளார். அதே சமயத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மராட்டிய மாநில முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தேவேந்திர பட்னாவிசுக்கும், துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் அஜித் பவாருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ஒரே கூட்டணியில் இருக்கும் அதிமுக, பாமக மகாராஷ்டிரா அரசியல் குறித்து இரண்டு விதமான கருத்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.