அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகளை யாருக்கு மாற்றுவது என்பது குறித்து திமுக மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை தற்பொழுது நிதித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தங்கம் தென்னரசுவிற்குக் கூடுதல் துறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையைத் தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக மாநிலங்கள் அவை எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தது தொடர்பாகப் பேசினார். அப்போது அவர், “ஒரு முதல்வர் இன்னொரு முதல்வரை சந்தித்துள்ளார். திமுக ஆட்சியில் யார் முதல்வராகவும், யார் நிழல் முதல்வராகவும் செயல்படுகிறார்கள் என அவர்கள் அனைவருக்கும் தெரியும். செந்தில் பாலாஜி தார்மீகப் பொறுப்பேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வது தான் சிறந்தது” என்றார்.