சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்துடன் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, பா.ஜ.க. சார்பில் முகுல் ரோத்கி மற்றும் மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் வேணுகோபால் ஆகியோர் இன்று ஆஜராகினர். வழக்கு விசாரணைக்கு முன்பாக பெரும்பான்மையை விரைவில் நிரூபிக்க வேண்டும் அல்லது பெரும்பான்மை தொகுதிகளில் உள்ள கட்சிக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்படும் போன்ற இரண்டு வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி, பா.ஜ.க. நாளையே பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா என கேள்வியெழுப்பினார். மேலும், ஆளுநர் எதன் அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அழைத்தார் எனவும் கேட்டார். இதற்கு பதிலளித்த பா.ஜ.க. சார்பு வழக்கறிஞர் நாளை பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் நாங்களும் எங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கிறோம் என காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞரும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி சிக்ரி, நாளை மாலை 4 மணிக்கே இரண்டு கட்சிகளும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், பா.ஜ.க. தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்கி நாளை வாக்கெடுப்பு நடத்தவேண்டாம். கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை நிராகரித்த நீதிபதி நாளை மாலையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.