நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளிநடப்பு செய்தார். அவரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரியை நக்கீரன் வாயிலாக சந்தித்தோம். அப்போது அவரது தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
அதில், “ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படக்கூடியதுதான் ஆளுநர் பிரதிநிதித்துவம். இந்த ஆளுநர் பதவி தேவையா? இல்லையா? என்று ஒருபுறம் கருத்துகள் இருந்தாலும் அந்த பதவியில் இருக்கும் வரை அவரை மதிப்பதுதான் நமது பண்பாடு. அந்த வகையில் தமிழ்நாடு அவரை மதிக்கிறது. ஆனால் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு எதிராக நிழல் யுத்தத்தை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஏற்கனவே அவர் சட்டமன்றத்தில் மரபு சார்ந்த உரையைப் படிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டு தேசிய கீதம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாகவே ஓடிப்போனர். இப்படிப்பட்ட செயலை செய்த அவர் இன்று தேசிய கீதத்தைப் பாடவில்லை என்று குற்றம் சுமத்தி நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.
தேசிய கீதத்தை அவமதிக்க வேண்டிய எந்தவித அவசியமும் தமிழ்நாடு அரசுக்கு இல்லை. தமிழ்நாட்டின் மரபு என்னவெனில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி இறுதியில் தேசிய கீதம் பாடி நிறைவு செய்வதுதான். இதன் அடிப்படையில்தான் சட்டப்பேரவை தொடர்ந்து இயங்கி வருகிறது. நாங்களும் அவ்வாறுதான் இயங்கி வந்தோம். ஆனால் ஆளுநர் அந்த மரபுகளைத் தகர்த்து போலித்தனமான வாதங்களை முன்வைத்து தன்னை ஒரு மலிவான அரசியல்வாதி காட்டிக்கொண்டிருப்பது அவருடைய பதவிக்கு உகந்த செயல் அல்ல. அவருடைய நடவடிக்கைகள் தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளை மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் உரசிக் காயப்படுத்தி இருக்கிறது.
ஆர்.என்.ரவி நாகாலாந்து மாநிலத்தில் ஆளுநராக இருந்தபோது, அங்குள்ள அரசுக்கு நெருக்கடி செய்யும் வேலைகளைச் செய்து வந்தார். அதோடு மட்டுமில்லாமல் நாகாலாந்து மக்களின் உணர்வுக்கு எதிராக ஆர்.என்.ரவி செயல்பட்டதால் அவருக்கு எதிராகப் பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தி இருக்கின்றனர் என்று வரலாறு உள்ளது. தமிழ்நாட்டிலும் அத்தகைய வேலைகளைத்தான் ஆர்.என்.ரவி செய்து வருகிறார். அவருடைய நடவடிக்கைகள் ஆளுநரைப்போல் பிரதிபலிக்காமல் நாடக கம்பெனி இயக்குநரைப்போல் பிரதிபலிக்கிறது. தமிழ்நாடு மரபுகளைத் தெரியாத அப்பாவி ஆளுநர் அவர் இல்லை. எல்லாமே தெரிந்துகொண்டு வேண்டுமென்றே விளம்பர அரசியலுக்காகவும் தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி தவறான ஆலோசனைகளை வழங்கிக்கொண்டு ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இப்படிச் செயல்படும் அவர் ஆளுநராக இருந்தாலும் கண்டிக்க வேண்டியது குடிமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கடமை. அதனால்தான் அவருக்கு எதிரான உணர்வுகள் வேகமாக தமிழ்நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிந்தே திட்டமிட்டு இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். அதனால் உடனடியாக ஒன்றிய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும். ஆர்.என்.ரவி ஒன்று சட்டசபையில் பிரச்சனை செய்கிறார் இல்லையென்றால் பாதியிலேயே இதுபோல் ஓடிவிடுகிறார். ஓடிப்போய் விளையாடுவதற்கு சட்டசபை என்ன ஆடுபுடி ஆட்டமா? சட்டமன்றத்தில் பின்பற்றி வரும் மரபை மாற்றக்கூடிய உரிமை ஆளுநருக்கு கிடையாது. அதே நேரத்தில் ஆளுநரை அழைக்காமலே சட்டமன்றத்தை நடத்த முடியும் என்பதையும் அதற்கான அதிகாரம் சபாநாயருக்கு இருக்கிறது என்பதையும் ஆளுநர் ஆர்.என்.ரவி புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநர் உரை என்பது அரசு எழுதித் தரும் உரையை வாசிப்பதுதான். அந்தவகையில் ஆளுநர் வேலையை இயந்திரத்தனமாகத்தான் பார்க்க முடியுமே தவிர தனித்த அதிகாரம் கொண்டவராக அவரைப் பார்க்க முடியாது. இதை அவர் புரிந்துகொண்டு அவருடைய எல்லையில் இருந்து பணியாற்ற வேண்டும்.
ஆளுநருக்கு நல்ல ஆலோசனைகள் தோன்றினால் அரசிடம் தெரிவிக்கலாம் அது அவரின் உரிமை. அந்த ஆலோசனைகளை அரசு பரிசீலிப்பது அரசுடைய கடமை. ஆனால் ஆளுநர் நோக்கம் நல்ல எண்ணமாக இருக்காமல் கழகம் செய்வது, விளம்பரம் தேடுவது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான கருத்துகளை உருவாக்கத் துணைபோகிறார். புதிய மரபுகளை ஆளுநர் உருவாக்க முடியாது. ஒன்றிய அரசு கொடுக்கக்கூடிய ஊக்கம்தான் அவரை இப்படியெல்லாம் செயல்பட வைப்பதாக நான் சந்தேகிக்கிறேன். எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கழகத்தை உருவாக்குவது அவப்பெயரை ஏற்படுத்துவதுதான் ஒன்றிய அரசின் நோக்கம். அந்த நோக்கத்திற்கு ஏற்ப எதிரும் புதிருமான மனப்போக்கு கொண்ட ஆளுநரை நியமித்து சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள். இது ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நடைமுறை உண்டு. உதாரணத்திற்கு கர்நாடகாவில் தனிக் கொடி உண்டு. அதை அங்கு இருக்கும் ஆளுநர்கள் எதிர்பாரா?. இந்தியாவில் மணிப்பூரும் நாகாலாந்துக்கும் 371வது சிறப்பு அந்தஸ்து பிரிவுகள் இருக்கிறது. அதேபோல் இங்கு இருக்கிறதா?. வட கிழக்கு மாநிலங்களில் சில இடங்களுக்கு செல்வதில் பர்மிட் முறை இருப்பது தமிழ்நாட்டில் இருக்கிறதா?. ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைக்கேற்ப நடைமுறைகள் முறையாக சட்டப்பூர்வமாக வகுக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. அதே போல் தமிழ்நாட்டில் தங்களது மொழியை மக்கள் முன்னிலைப் படுத்துகிறார்கள். ஆனால் ஆளுநர் இந்தி ஆதிக்கவாதியாக இருப்பதால் அவருக்கு தமிழும் பிடிக்காது, தமிழ்த்தாய் வாழ்த்தும் பிடிக்காது. அவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காகத் தமிழ்நாட்டு மக்களின் மரபுகளைத் தூக்கி எறிந்துவிடமுடியுமா? அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு தான் விரும்பக்கூடிய மாநிலங்களுக்கு போகட்டும். அவருக்காக காலம் முழுவதும் பின்பற்றும் நடைமுறைகளை மாற்றி அமைக்க முடியாது” என்றார்.