சென்னை பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டம் 7ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 'சொல்' ஆண்டு மலர் வெளியீட்டு விழா சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்று (07.01.2025) நடைபெற்றது. இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பங்கேற்றுச் சிறப்பு உரையாற்றியிருந்தார்.
இதில் ஆ.ராசா பேசியதாவது, “உலகத்தில் தத்துவங்கள் தோன்றும். அந்த தத்துவங்களை முன்னெடுக்கத் தலைவர்கள் வருவார்கள். அப்படி தலைவர்கள் வரும்போது இயற்கையாகவே தத்துவங்கள் சேதாரம் அடையும். ஏனென்றால் வருகின்ற தலைவர்களுக்கு சுயநலம் வந்துவிடும். காரல் மார்க்ஸை விட பெரிய தலைவர் உண்டா?. அப்படிப்பட்ட மாமனிதர் சாகும்போது 4 பேர் கூட இல்லை. ஆனால், அவர் எழுதிவிட்டு போன கம்யூனிசத் தத்துவம் மிகப்பெரிய பிரளயத்தை மண்ணில் ஏற்படுத்தியது. அதற்கு பின்பு லெனின் போன்ற தலைவர்கள் வந்தார்கள். தத்துவத்தைச் சரியாக பார்த்துக்கொள்ளும் தலைவர்கள் இருக்கும்வரை தத்துவத்திற்கு சேதாரம் இல்லை. அதன் பின்பு ஸ்டாலின் வந்து தத்துவத்தைக் குறைத்தார். எங்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சொல்லவில்லை. எங்கள் ஸ்டாலின் தத்துவத்தோடு இருக்கும் மகத்தான தலைவர். அந்த ஸ்டாலின் காலத்தில் ரஷ்யா நீர்த்துப்போனது. அதன் பிறகு குருசே வந்தார். கடைசியாக கோர்ப்பச்சே வந்தார்.
எந்த பொதுவுடைமை தத்துவத்தால் எல்லா தேசிய இனங்களையும் ஒன்றாக்கி வல்லமை பொருந்திய அமெரிக்க நாட்டுக்கு எதிராக சோவியத் ரஷ்யாவைக் கட்டமைத்தார்களோ,அந்த நாடே சிதறுண்டு போவதற்கு என்ன காரணம் கோர்ப்பச்சே என்ற மோசமான தலைவரால்தான். அதனால் தத்துவம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அந்த தத்துவத்தை கையாளுகிற அடுத்த தலைமுறை தலைவர்கள் கெட்டவர்களாக கருத்து குறை உள்ளவராக இருந்தால் தத்துவம் தோற்றுப்போகும். ஆனால் திராவிட இயக்கத்திற்கு மிகப்பெரிய பெருமை பெரியாருக்கு பிறகு அண்ணா தான். இவர்கள் பாலின சமத்துவம், சாதியற்ற சமூகத்தை கொண்டு வரக் கனவு கண்டார்கள். அந்த கனவை அரசியலில் சேர்த்தவர் கலைஞர். அவர் செய்த திட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். தத்துவத்தின் மீது தலைவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைய குறைய தத்துவம் தோற்றுப்போகும். கம்யூனிச தத்துவத்தில் கோளாறு இல்லை. கம்யூனிசம் செம்மையானது. அந்த தத்துவத்தை எடுத்து வந்த தலைவர்கள் நீர்த்துப்போன காரணத்தினாலும் அவர்கள் சுயநலவாதிகளாக மாறிய காரணத்தினாலும் கொள்கை தோற்றுவிட்டது” என்றார்.