அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் விடாமுயற்சி படம் அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது.
சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், அதிலும் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தி வருகிறார். 2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் உள்ளிட சில போட்டிகளில் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து எந்த கார் ரேசிலும் பங்கேற்காமல் இருந்த அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விரைவில் நடக்கவிருக்கும் ஐரோப்பியன் ரேஸிங்கில் பங்கேற்கவுள்ளதாக அவரது மேலாலர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார்.
இதையடுத்து ‘அஜித்குமார் ரேஸிங்’என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை அஜித் உருவாக்கிய நிலையில் அணியின் சார்பாக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பேபியன் என்பவர் ஐரோப்பியா சீரிஸ் 992 ஜிடி3 கப் பிரிவில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணியின் லோகோ வெளியிடப்பட்டது. மேலும் அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என்றும், அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24ஹெச், போர்சே 992 ஜிடி3 கார் ஆகிய பந்தயங்களில் அஜித் மற்றும் அவரது அணி போட்டியிடுகிறது. இதில் போர்சே 992 ஜிடி3 கார் பந்தயத்திற்காக கடந்த மாதம் சோதனை ஓட்டம் மேற்கொண்டார் அஜித். அப்போது அவரது ஹெல்மட் மற்றும் காரில் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை லோகோ இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, துணை முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் துபாயில் கார் ரேஸில் பங்கேற்பதற்காக அஜித் சமீபத்தில் துபாய் சென்றிருந்தார். அங்கு தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அஜித் சென்ற கார் தடுப்பனையில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது கார் இரண்டு முறை சுழன்று நின்றது. பின்பு அஜித் வெளியே வந்தார். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.