2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று (06-01-25) தொடங்கியது. அப்போது, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அ.தி.மு.க எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அ.தி.மு.க எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல், சட்டப்பேரவைக்குள் வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டுச் சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறியது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் அவமதித்ததாகக் கூறி தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (07-01-25) நடைபெற்று வருகிறது. அதிமுக- பா.ஜ.க ரகசிய கூட்டணியில் இருப்பதாகக் கூறியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தெலுங்கானா மாநில முன்னாள் துணைநிலை ஆளுநரும், பா.ஜ.க மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் இன்று (07-01-25) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஆளுநருக்கு எதிரான திமுகவின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி கொடுத்தது எப்படி?. தேச ஒற்றுமையான தேசியக் கீதத்திற்கு மரியாதை கொடுங்கள் என்று சொன்னால், அதற்கு பிரிவினைவாதம் என்ற புதிய அர்த்தத்தை தமிழக அரசு தான் கற்பிக்க முடியும். வேங்கைவயல் பிரச்சனையை தீர்த்தீர்களா? ஆண்ட பரம்பரை என்று உங்களுடைய அமைச்சர் ஒருவர் சாதிய பாகுபாடோடு பேசியதை கண்டித்தீர்களா? எனவே, வேறுபாடையும், பிரிவினையையும் ஏற்படுத்துவதை தமிழக முதல்வர் கண்டிக்கவில்லை.
ஆனால், ஆளுநர் தேசியக் கீதத்திற்காக ஒரு கோரிக்கையை வைத்தார். அதை நிராகரித்துவிட்டு அவருக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிகின்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைப்பதற்காக இன்றைக்கு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். எனவே, தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். கடந்த 10 நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தலைவர்கள், தொண்டர்கள் கைதாகினார்கள்; அனுமதி மறுக்கப்பட்டது. ஆக, தமிழக தெருக்களில் எதிர்க்கட்சிகளுக்கு மறுப்பு, ஆளுங்கட்சிக்கு அனுமதியா?. நேற்று அனுமதி பெற்று இன்றைக்கு எப்படி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்?. ஆனால், நாங்கள் கேட்டால் 5 நாட்களுக்கு முன்பு அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவே, அப்பட்டமாக எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயகம் இல்லவே இல்லை என்ற குற்றச்சாட்டை நான் வைக்கிறேன்.
முதல்வர் வரம்பு மீறி ஆளுநரைப் பற்றி ஒரு ட்வீட் போடுகிறார். ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஏன் நீங்கள் வாயை திறக்கவில்லை. மிக தவறான போக்கில் தமிழக அரசு சென்று கொண்டிருக்கிறது என்று சமீபத்திய நிகழ்வுகள் ஒரு சான்று” என்று கூறினார்.