மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் படத்திறப்பு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று (07-01-25) காலை நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவில் மாபெரும் தூணாக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங். தமிழக காங்கிரஸுக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இரண்டு முக்கியமான தலைவர்களை நாம் அடுத்தடுத்து இழந்திருக்கிறோம். இவர்களுடைய இழப்பு நமக்கு பெரிய இழப்பாக அமைந்திருக்கிறது. காங்கிரஸ், தமிழ்நாடு மட்டுமல்ல இருவரையும் அறிந்தவன் என்ற முறையில் எனக்கும் இது தனிப்பட்ட இழப்பு தான். டாக்டர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
டாக்டர் மன்மோகன் சிங், இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக பொருளாதார மேதைகளில் ஒருவராக மதிக்கப்பட்டவர். அவர் நினைத்திருந்தால், எந்த பரபரப்பு இல்லாத கவலை இல்லாத வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்க முடியும். அவர் போன்ற பொருளாதார சிந்தனையாளர்கள் அப்படிப்பட்ட வாழ்க்கையை தான் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக அரசியலில் நுழைந்து நிதியமைச்சராக பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம்பெற்றார். அவர், உருவாக்கிக் கொடுத்த பொருளாதார திட்டங்கள் தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. 2004ஆம் ஆண்டு அவரை தேடி பிரதமர் நாற்காலி வந்தது. அன்றைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றவுடன், சோனியா காந்தி தான் பிரதமராக இருக்க வேண்டும் என்று கலைஞர் மட்டுமல்லாது எல்லா தலைவர்களும் சொன்னார்கள். ஆனால், பிரதமர் பதவியை மறுத்து மன்மோகன் சிங்கிடம் கொடுத்தார். அது தான் சோனியா காந்தியின் பெருந்தன்மை.
இரண்டு முறை 10 ஆண்டுகாலமாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்து வழிநடத்தி இருக்கிறார். அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் எண்ணிலடங்காத திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. 10 ஆண்டுக்கால மன்மோகன் சிங் அமைச்சரவையில் 21 தமிழர்கள் ஒன்றிய அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தார்கள். மிக அதிக தமிழர்கள் ஒன்றிய அமைச்சரவையில் கோலோச்சி இருந்தது அவருடைய ஆட்சியில் தான். அதன் மூலமாக, எண்ணற்ற திட்டங்கள் நமக்கு கிடைத்தது. தமிழ்நாட்டின் உடைய கனவுகளை மதிப்பவராக மன்மோகன் சிங் இருந்தார். அந்த வகையில், மன்மோகன் சிங்கின் இழப்பு என்பது தமிழ்நாட்டினுடைய மிகப் பெரிய இழப்பு என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் இழப்பு என்பது எனக்கு தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு. தந்தை பெரியாரின் குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்ல, அவருடைய தந்தையார் ஈவிகே சம்பத், அறிஞர் அண்ணாவுக்கும், கலைஞருக்கும் நெருக்கமான நண்பராக இருந்தார். மனதில் பட்டதை மறைக்காமல், அதே நேரத்தில் துணிச்சலாக எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசக்கூடியவர் நம்முடைய ஈவிகேஎஸ் இளங்கோவன். ஆதரித்தாலும் சரி, எதிர்த்தாலும் அதை சரியாக உறுதியாக செய்யக்கூடியவர். இந்த ஆட்சி தான் உண்மையான காமராஜர் ஆட்சி என்று அவர் வெளிப்படையாக சொன்னார்” என்று பேசினார்.