Skip to main content

ஆஸ்கர் ரேஸில் கங்குவா

Published on 07/01/2025 | Edited on 07/01/2025
kanguva in oscar 2025

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது மார்ச் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம்(Best International Feature Film) பிரிவில் பல்வேறு நாடுகளில் இருந்து படங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் இருந்து இந்தாண்டு பாலிவுட் படமான ‘லாபடா லேடீஸ்’(Laapataa Ladies) பரிந்துரைக்கப்பட்டது.  ஆனால் இப்படம் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் இந்தாண்டும் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட படம் வழக்கம் போல் வெளியேறியுள்ளது. இறுதிசெய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வருகிற 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் ஆஸ்கர் குழுவினர், சிறந்த படம்(Best Picture) பிரிவிற்கு 324 படங்கள் தகுதி பெற்றுள்ளதாக அறிவித்து அந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் சிவா - சூர்யா கூட்டணியில் உருவான கங்குவா படம் இடம்பெற்றுள்ளது. ஆஸ்கர் விருதுகளில் சில பிரிவுகளின் கீழ் சில கட்டுப்பாடுகளுடன் உலகில் இருந்து பல்வேறு மொழி படங்கள் பரிந்துரைக்கப்படும். அந்த வகையில் கங்குவா படம் அப்படக்குழுவினரால் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது அந்த பிரிவின் தகுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் கங்குவா படத்தை தவிர்த்து மலையாளத்தில் இருந்து பிரித்திவிராஜ் நடித்த ஆடுஜீவிதம், மலையாள நடிகைகள் நடித்த ஆல் வி இமேஜின் அஸ் லைட், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியான கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ் உள்ளிட்ட சில படங்கள் இடம் பெற்றுள்ளன. 

இந்த பட்டியலில் இருக்கும் படங்கள், ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். அதற்கான வாக்கெடுப்பு ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பின்பு இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வெளியாகும். அதில் ஐந்து படங்கள் இடம்பெறும். இதில் இருந்து ஒரு படத்தை வாக்குகள் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள். அதற்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படம் மார்ச் 2ஆம் தேதி நடக்கவுள்ள விருது விழாக்களில் அறிவிக்கப்படும்.

சார்ந்த செய்திகள்