‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் திராவிட சிந்தனையாளர், பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட கட்சிகள் குறித்து தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
இதை ஒரு சமூக பிரச்சனையாகக் கருதக் கூடாது. ஒரு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அந்த மாணவியின் மனதைப் பற்றி போராடுபவர்கள் யோசிக்க வேண்டும். இந்த விவகாரத்தை வைத்துக்கொண்டு தி.மு.க. அரசைக் காயப்படுத்த தான் போராடும் கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். தி.மு.க. அரசு குற்றவாளியை மூன்று மணி நேரத்தில் கைது செய்து, 5 பிரிவுகளில் வழக்குப் பதிவிட்டு சிறையில் தள்ளியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிக்கு தண்டனை வழங்குவதில் அரசுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இந்த விவகாரத்தை எடுத்து மற்ற கட்சிகள் போராடுவது அரசியல் தெளிவு இல்லையென்பதையும் விரக்தியின் உச்சியில் இருப்பதையும் காட்டுகிறது. போராடும் ஊர்க் குருவிகள் தி.மு.க. அரசை காயப்படுத்தத் தகுதி இல்லாதவர்கள். அப்படி காயப்படுத்த நினைத்தால் நிச்சயம் அதில் தோற்றுப்போவார்கள்.
சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறது. அதனால்தான் இவ்விவகாரம் தொடர்பாக பா.ம.க. முன்னெடுத்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. முதலில் செளமியா அன்புமணி தைலாபுரத்தில் போராடு வேண்டும். காரணம் கட்சியில் அவரது கணவருக்கு நெருக்கடி இருக்கிறது. முகுந்தனை இளைஞரணி தலைவர் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். எனவே இந்த பிரச்சனை தொடர்பாக செளமியா அன்புமணி முதலில் தைலாபுரத்தில் போராட வேண்டும். தகப்பனுக்கும் மகனுக்குமான போட்டியில்தான் செளமியா கவலைப்பட வேண்டும். தமிழ்நாடு முன்பு இருந்ததைவிட பெண்களுக்கு இப்போது பாதுகாப்பான இடமாகத்தான் இருக்கிறது. பா.ம.க. வன்முறை கட்சி, அவர்கள் வாழ்க்கை முறையே வன்முறைதான். ஒரு வன்முறை கட்சி போராட அனுமதி கேட்டதும் காவல் துறை கொடுத்துவிட முடியுமா? அக்கட்சியினர் செய்யப்போகிறார்கள் என்று காவல்துறையினர் அனுமதி வழங்குவதில் யோசித்திருப்பார்கள்.
பா.ம.க. கட்சி நாட்டில் ஒரு பெரிய சக்தியாக இருக்கிறதா? பென்னாகரம் தொகுதியில் ரோடு ரோடாக சென்று ஓட்டு கேட்டும் அவர்கள் வெற்றி பெற்றார்களா? கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவதற்கான யோக்கியதை பா.ம.க.-வுக்கு இருக்கிறதா? ஒரு கூட்டணியை தி.மு.க. உருவாக்கி வைத்துள்ளது. அதற்காகத்தான் கூட்டணியில் தி.மு.க. காலம் தள்ளுகிறது என்று நினைப்பது தவறு. நாட்டு நலன் கருதி அந்த கூட்டணிக்கு தி.மு.க. தலைமை தாங்குகிறது. தேசிய அரசியலில் மதச்சார்பற்ற அணிக்கு உயிர் தருவதற்கான முயற்சியில் கூட்டணி அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.
அந்த மதச்சார்பற்ற அணியில் காங்கிரஸ், இடது சாரிகள், முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இருக்கிறது. இது நாட்டு நலனுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. நாட்டு நலன் கருதாது வீட்டு நலன் கருதி தர்மபுரி வேட்பாளராக செளமியாவை பா.ம.க. அறிவித்தது. தனது கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிகளுக்கு பிரச்சாரத்திற்குப் போகாமல் எல்லோரும் தர்மபுரியில் உட்கார்ந்துதான் கும்மி அடித்தனர். பா.ம.க. கட்சி வருகிற தேர்தலோடு முடிவுக்கு வரப் போகிறது. 2026க்கு பிறகு பா.ம.க. கட்சி தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாத அவநிலை உருவாகும். இதில் ராமதாஸ் கவனம் செலுத்த வேண்டும். அவர் எடுக்கும் முடிவுக்கு மகனே கீழ்ப்படியாமல் இருக்கிறார். கட்சி ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை ராமதாஸுக்கு பணிவுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.