தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், ஆதி தமிழர் பேரவைக்கு 1 தொகுதி, கொ.ம.தே.கவிற்கு 3 தொகுதி, த.வா.கவிற்கு 1 தொகுதி என ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று (10.03.2021) மதியம் 12 மணிக்கு வெளியாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த 6-ஆம் கட்ட தேர்தல் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ச் 12, 13 ஆம் தேதிகளில் சேலம், நாமக்கல், திண்டுக்கல், கரூர், மதுரை ஆகிய இடங்களில் ஸ்டாலின் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த தேர்தல் பரப்புரை நிறுத்தப்பட்டுள்ளது.