சினிமா கந்துவட்டி பிரபலம் மதுரை அன்பு, சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் வீடு, அலுவலகம் இவற்றிலெல்லாம் ஐ.டி.ரெய்டு நடந்ததற்கு சட்ட விரோத பணப் பரிவர்த்தனைதான் காரணம் என்பது அப்பட்டமான உண்மை. அதிலும் மதுரை அன்புவின் அசுரத்தனமான பணக் குவிப்பைப் பார்த்து ஐ..டி. அதிகாரிகளே ஆடிப்போய்விட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகமான ஆயகர் பவனுக்கு நேரில் வந்து ஆஜராகி விளக்கம் சொல்லுமாறு நடிகர் விஜய், மதுரை அன்பு, கல்பாத்தி அகோரம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப் பியது ஐ.டி. இதில் விஜய்யின் ஆடிட்டர்களும் அன்புவின் ஆடிட்டர்களும் ஐ.டி.அதிகாரிகள் முன்பு ஆஜராகி பண வரவு குறித்து விளக்கம் அளித்துள்ளனர். ஏ.ஜி.எஸ்.சினிமா நிறுவனத்தின் சி.இ.ஓ.வும், கல்பாத்தி அகோரத்தின் மகளுமான அர்ச்சனா தங்களது வக்கீல் மற்றும் ஆடிட்டருடன் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
இப்படி நெருக்கடிக்கு மேல் நெருக்கடி வந்தாலும் எதற்கும் அசராத அன்பு, மதுரை செல்லூரில் 100 கோடி ரூபாய் எஸ்டிமேட்டில் பிரம்மாண்ட மால் தியேட்டர்கள் கட்டும் வேலையை ஆரம்பித்துள்ளார். அதே நேரம் தனது தம்பி அழகர்சாமியை மதுரை, ராமநாதபுரம் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக வெற்றி பெற வைத்துள்ள அன்பு, டெல்லிப் பிரதிநிதியான ஒருவரிடமும் வரிசையாக சினிமா எடுத்துக்கொண்டிருக்கும் கல்லூரி அதிபர் ஒருவரிடமும் ஐ.டி.அதிகாரிகளின் ஆக்ரோஷத்தைக் குறைக்கச் சொல்லும்படி சமாதானம் பேசி வருகிறாராம்.
அன்பு, அகோரம் ஆகியோரைக் குறிவைத்தது பணப்பரிவர்த்தனைக்காக என்றால் விஜய்யைக் குறிவைத்தது மதமாற்றப் பிரச்சனைக்குத்தான். ஆனால் அவரது கணக்கு கரெக்டாகவே இருந்தது. ஆனாலும், சம்பளம் என்ற பெயரில் கணக்கு எழுதி மத மாற்றத்திற்கும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கும் விஜய் தரப்பிலிருந்து தாராளமாக பணம் போவதை ஸ்மெல் பண்ணித்தான் இந்த ரெய்டு என பா.ஜ.க.தரப்பு சொன்னதை கடந்த இதழில் எழுதியிருந்தோம்.
நமது இதழ் கடைகளுக்கு வந்த அன்று காலையிலிருந்தே, பிரபல கல்லூரி அதிபரின் மகள் மூலமாக சினிமா பிரபலங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி வருவதாகவும், "மாஸ்டர்' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் விஜய் சேதுபதி மற்றும் பிரபல நடிகர்கள் ஆர்யா, ரமேஷ் கண்ணா, நடிகை ஆர்த்தி ஆகியோர் கிறிஸ்தவத்திற்கு மாறிவிட்டனர். மேலும் சில சினிமா பிரபலங்கள் மாறப் போகிறார்கள். கல்லூரி அதிபரின் மகளுக்கு விஜய் தரப்பு சப்போர்ட் இருக்கிறது. இதுக்காகத்தான் ஐ.டி.ரெய்டு நடந்தது எனவும் சோஷியல் மீடியாக்களில் வைரலனாது.
இதைப் பார்த்து டென்ஷனான விஜய் சேதுபதி, மதமாற்றம் பற்றி எதுவும் சொல்லவில்லை. "போய் வேற வேலை இருந்தா பாருங்கடா' என ஆவேசமாக ட்விட்டியுள்ளார். விஜய்யை அடுத்து விஜய் சேதுபதியை டார்கெட் செய்யும் பா.ஜ.க.வினரைப் பார்த்து, விஜய்யின் துப்பாக்கி பட டயலாக்கான "சஸ்பென்ஸோட சாவுங்க' என்பது போல அமைந்த விஜய் சேதுபதியின் ட்வீட், சமூக வலைத்தளங்களில் படு வைரலாகியுள்ளது.